கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?
– கலைஞர் வினா?
கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில், ”கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?” எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
“கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்’ எனக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், அது புலி வாலை பிடித்த கதை போல ஆகிவிடும். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், உலகெங்கிலும் உள்ளனர்; அவர்கள் இல்லாத இடமே இல்லை. “சென்னையில் உள்ள கேரளத்தவர்களை, தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்” எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், என்னவாகும்? இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்தில் உள்ளவர்களும், அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை, வெளியேற்ற முன் வந்தால், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பதெல்லாம் கேள்விக்குறியாகி விடாதா? அட்டப்பாடியில், பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்களைத், தமிழர்கள் கவரவில்லை. கேரள அரசில் பணியாற்றும் சில அதிகாரிகள், தமிழர்களிடம் இருந்து, அந்த நிலங்களைப் பெற்று, “பழங்குடியின மக்களிடம் திரும்ப ஒப்படைக்கிறோம்” என்ற பெயரால், அவற்றை ஒரு சில பெரிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியாகத்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. தமிழக அரசு, இச்சிக்கல் குறித்து உடனடியாகக் கவனித்து, கேரள அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து, அட்டப்பாடியில் காலம், காலமாக இருந்து வரும் தமிழர்களைக் காப்பாற்ற முன் வர வேண்டும்.”
இவ்வாறு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
Leave a Reply