கொடைக்கானலில் மீண்டும் நிலச்சரிவு!
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்மழையால்
இரண்டாவது முறையாக பத்து இடங்களில் நிலச்சரிவு
போக்குவரத்து சீராகப் பல நாட்கள் ஆகும் பேரிடர்!
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள டம்டம்பாறை பகுதியில் தொடர்ந்து இரவு பகலாக மழை பொழிந்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலையிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம், இயற்கையாக உருவான ஆறுகள் ஆகியவற்றின் மூலம் மலைப்பகுதியில் உள்ள சாலைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பொழியாததால் ஆழ்துளைக்கிணறுகளுக்காகத் துளைபோட்டும் பாறைகள் எடுப்பதற்கும் வீடுகள் கட்டுவதற்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன.. இவைதவிர மலைக்கு அரணாக இருந்த மரங்கள் ஏராளமாக வெட்டி கடத்தப்பட்டுவிட்டன. இதனால் சாலைகளில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன. பத்துக்கும்மேற்பட்ட இடங்களில் சாலைகள் அரிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனால் மலைச்சாலை அருகே காவல்துறையினர் கொடைக்கானல் செல்லும் வாகனங்களை மாற்றுவழியில் திருப்பிவிடுகின்றனர்.
சாலை துண்டிப்பால் கொடைக்கானல் பகுதியில் இருந்து வரும் உருளைக்கிழங்கு, சீமைஅவரை(பீன்சு), பெங்களூர்கத்திரிக்காய்(சவ்சவ்),செங்கிழங்கு(பீட்ரூட்டு), சீமைமுள்ளங்கி(காரட்டு), வெள்ளைப்பூண்டு வருகை தடைபட்டுள்ளது. இதனால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் நிலச்சரிவைத் தடுப்பதற்காகப் பாறைகள் வெடிவைத்துத் தகர்ப்பவர்கள் மீதும் மலைப்பகுதிகளில் ஆழ்துளைக்கிணறு போடுபவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
ஒளிப்படங்கள் மு.சா.பன்னீர்செல்வம்
Leave a Reply