சாதிச்சான்றிதழுக்காக

உரூ.50, 000  கொடுக்க வேண்டிய

மலைவேடன் மக்கள்

 

  தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்கள், தங்கள் வேர்களைத்தேடி அலையவேண்டிய நிலையில் உள்ளனர். இதற்குக் காரணம் மற்ற சாதியினர் தடுப்பதுதான். மலைவேடன் எனச் சாதிச்சான்றிதழ் வாங்கிவிட்டால் பட்டியல்இனம்(எசு.டி.) என்ற தனிப் பிரிவில் சாதிச்சான்றிதழ் கிடைக்கும். இச்சான்றிதழை வைத்துக் கல்வி, பொருளாதாரம், சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து நிலைகளிலும் இந்தச் சமூக மக்கள் முன்னேறிவிடுவார்கள். இதனால் தங்களுக்குக் கிடைக்ககூடிய சலுகை தட்டிப்பறிக்கப்படும் என நினைத்து மற்ற சமூகத்தினர் இதனைத் தடுத்துவருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதுதான் வேடிக்கை. இவ்வாறு அலைக்கழிக்கப்படுவது தொடர்பில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் தில்லிபாபு கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் என்று கடந்த 15.09.2015 அன்று தீக்கதிர் நாளிதழ் பதிவு செய்துள்ளது. கடந்த 31.3.2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை சார்பில் அனுப்பபட்ட மடலில் தமிழகம் முழுவதும் வெறும் 2,240 குடும்பங்கள் உள்ளன என அவர்களின் மக்கள் தொகை பற்றி புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் வேடன், பேடர், வேடர், வேட்டுவன், நாயக்கர் என அழைக்கப்படுபவர்கள் அனைவரும் மலைவேடன் மக்கள் தான் எனக்கூறினார். இப்பழங்குடியின மக்கள் தேனி, திண்டுக்கல், மதுரை நீலகிரி மாவட்டங்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் பரசுராமபுரம், பழைய வத்தலக்குண்டு, மீனாட்சிபுரம் முதலான 48 ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் 32 கூட்டங்களாகத் தங்களுக்குள்ளே பிரித்துள்ளனர். அதன்படி வாழைக்காய்வெட்டி, ஆண்டிகுலத்தான், தேனூரான், மன்னழகர், பெத்தகால், நூற்றியோறான், தாராளான், கலிங்கன், எருமைச்சாணி, கருத்தம்மா, கம்பத்தான், தாண்டவன், விருதலையான், முப்புளி, மல்லாத்து, சித்திரன், கருப்பு, சித்தூரான், பாப்பா, பெரிய கருப்பன், கட்டக்காமன், பாப்பிபேரான், துரையா, அழகாப்பிள்ளை, புளியங்குளத்தார், ஆயக்குடி, வேடர்பாறை, மாலைக்கோவில், குள்ளமன்மேடு, முனியாண்டி, இராசாத்தி, குருவிக்காரன், ஏழுகண், காட்டிசித்தாதன் என்ற கூட்டங்களாக வாழ்கின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வசிக்கும் இதே சாதியினர் திருமண உறவைக் கொண்டுள்ளனர் மதுரையில் மாடக்குளம், துவரிமான், மன்னாடிமங்களம், கோட்டைமேடு, திண்டுக்கல் மாவட்டதில் உள்ள பழையவத்தலக்குண்டு ஆகிய ஊர்களில் வாழும் மலைவேடன் இனத்தவருக்கு மாநில கூர்நோக்கு குழுவால் மலைவேடன் இனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆதாரங்களையும் முன்வைத்துச் சாதிச்சான்றிதழ் கேட்டால் 50,000உரூபாய் வரை மொய் அழ வேண்டும். மொய் அழுதபின்னர் சாதிச்சான்றிதழ் வழங்கப்படும். இதன் தொடர்பாகப் பரசுராமபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவர் கூறுகையில், சாதிச்சான்றிதழ் பெறுவதற்காக 25 ஆண்டுகாலமாக அலைந்து வருகின்றோம். 25 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.. அதன்பின்னர் கோட்டாட்சியர் மூலம் தான் சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பின்னர்தான் எங்கள் சமூக மக்களுக்குச் சிக்கல் வந்தது. நாங்கள் ஒவ்வோர் ஆதாரத்தையும் கொடுத்தும் சாதிச்சான்றிதழுக்காக அலைந்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அலைக்கழிப்பு மற்றும் பணவிரயத்திற்கு அஞ்சி வேறு வழியில்லாமல் பிற்படுத்தப்பட்ட சமூகம் (பி.சி.) என்ற சாதிச்சான்றிதழ் வாங்கிப் படிக்க வைக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் எங்கள் சமூக மக்கள் வாழ்ந்ததாகவோ இருந்ததாகவோ வரலாற்றுக் குறிப்பில் இடம் பெறாமல் போகும் என்றார்.

  இதன் தொடர்பாகக் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பண்டைய காலத்தில் உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், 1950 ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்திரங்கள், பெற்றோர்கள் பெற்றிருந்த சாதிச்சான்றிதழ்கள் இவற்றை ஆராய்ந்து விசாரணையில் சாதி உறுதியானபின் சான்று வழங்கப்படவேண்டும் என்றும் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கல் அதிகாரம் வருவாய்க் கோட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் இதிலும் மேல்முறையீடு செய்வதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரைத் தான் அணுகவேண்டும் என்றும் கூறினார். இவற்றைத்தவிர தந்தை அல்லது தந்தை வழி உறவினரின் சாதிச்சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றை மனுதாரர் வாக்குமூலத்துடன் அனுப்பி வைத்தால் நேரடி விசாரணை மற்றும் பொதுமக்கள் வாக்குமூலம் ஊர் நிருவாக அலுவலர் அறிக்கை, வட்டாட்சியர் அறிக்கை பெற்று விசாரணை மேற்கொண்டு வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட-பழங்குடியின ஆணைகள்-1976 ஆம் ஆண்டு சட்டப்படி இவர்களுக்குக் குறியீட்டு எண் 22 வழங்கப்பட்டுள்ளது. எனவே சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாகவும், சொந்த நாட்டிலேயே தன்னுடைய சாதி அரசு அதிகாரிகளாலும், ஆதிக்கச் சமூகத்தினராலும் அழிந்து வருவதை தடுத்து நிறுத்தஇயலாதவர்களாகவும் உள்ளனர். அரசு தன்னுடைய நிலையை ஒரு படி தளர்த்தவேண்டும். அதே வேளையில் பழங்குடியின மக்கள் ஒருபடியை உயர்த்தச் சட்டமன்றத்தில் அவ்வப்பொழுது குரல் கொடுக்கவேண்டும். இல்லையெனில் காவல் காத்த சமூகம் ஏவலாளியாக மாற்றப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

vaigaianeesu_name_peyar