தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன!
தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன : – முன்னாள் போராளி சான்றுரை
இனப்படுகொலைப் போரின் பின்னரான மறுவாழ்வின்போது தமக்கு வேதிய(இரசாயனம் கலந்த) உணவுகள் வழங்கப்பட்டதோடு ஐயத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சான்றுரைத்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு சான்றளித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதிப்போரின்போது பலர் சரணடைந்திருந்தனர். இது தொடர்பாகப் பல செய்திகள் உள்ளன. ஆனால் மக்கள் இது தொடர்பாகக் கதைக்கப் பயப்படுகின்றார்கள். இதைக் கதைக்கப்போனால் எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. தாம் ஒருவரையும் கொல்லவில்லை என்கிறார்கள். அவ்வாறாயின் அங்கு சென்றவர்கள் எல்லாம் நஞ்சு அருந்தியா இறந்தார்கள். கோழியைப் பிடித்துச் சாப்பிட்டவனிடம் “எங்கள் கோழியைக் கண்டீரோ” என எவ்வாறு கேட்க முடியும். அவன் எங்களுக்கு நீதியைத் தரப்போவதில்லை. எங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் கூடக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாகப் பன்னாடுகளில் இருந்து நடுநிலைமையான நாடுகள் தான் எமக்கு நீதியை வழங்கவேண்டும்.
கிரேசிமா, நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூடக் கண்டிப்பாக இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான்.
எங்கள் விரலை வெட்டிப்போட்டுத், “தம்பி தெரியாமல் வெட்டிவிட்டேன் நான். அம்பு வில் தருகிறேன், உன்னைப் பாதுகாக்க” எனக் கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன.
விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. போர்அறம்(யுத்த தருமம்) என்று ஒன்று உள்ளது. சிரீலங்கா அரசாங்க இராணுவத்திற்குப் போர் அறம்பற்றிக் கடைசிவரை போதிக்க வேண்டும்.
சரணடையப்போகிறவர்களைச் சுடுவது அறமில்லை. ஏனெனில் அவர்கள் ஆயுதமற்றவர்(நிராயுதபாணி)கள்.
நான் ஒரு முன்னாள் போராளி. தடுப்பால் வந்த பிறகு நாங்கள் போர்க்களத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறோம். சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவர்கள் எங்களுக்கு வேதிய(இரசாயன) உணவுகளைத் தந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 புதுநிறைகல் தூக்கி எத்தனையோ புதுக்கல்(கிலோமீற்றர்) ஓடுகிற எனக்கு ஒரு பொருளைக்கூடத் தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விளங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினார்கள்? ஊசியைக் கொண்டுவந்து போடுவார்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளுக்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்ப துளிர்க்காது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply