(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

 

19. பயனில் சொல் விலக்கல்

  1. பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே.

பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும்.

  1. அறியா மையினின் றச்சொல் பிறக்கும்.

பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது.

  1. அறியா மையினை யச்சொல் வளர்க்கும்.

பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது.

  1. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும்.

அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது.

  1. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும்.

பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின் நட்பை அதிகரிக்கும் இயல்பு உடையது.

  1. பயனுள சொல்லினைச் சொலவிடா தச்சொல்.

பயனற்ற பேச்சு பயனுள்ள பேச்சினை தடுக்கும் இயல்பு உடையது.

  1. பயனுள செயலினைச் செயவிடா தச்சொல்.

பயனற்ற பேச்சினால் பயனுள்ள செயல்களைச் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

  1. பயனில சொல்லுவர் நயனுறா ரென்றும்.

பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள் ஒரு நாளும் இன்பம் அநுபவிக்க மாட்டார்கள்.

  1. பயனில சொல்பவர் பதடியென் றறைப.

பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள், மனிதர்களில் பதர் போன்றவர்கள்.(அவர்களால் ஒரு பயனும் ஏற்படாது)(பதர்-நெல்லில் உமி மட்டும் இருக்கும். உள்ளே அரிசி இருக்காது)

  1. பயனில விலக்கிப் பயனுள சொல்லுக.

அதனால் பயனற்றவற்றை நீக்கிப் ப்பயனுள்ளவற்றை மட்டும் பேச வேண்டும்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

வ.உ.சிதம்பரனார்