தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்) – கே.இராசு
தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்)
வறட்சி தாண்டவமாடும் மரத்துவாடா பகுதியில் பல கல் (மைல்) தொலைவு நடந்து சென்று ஒரு பானைத் தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலையில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வோர் ஊரிலும் பார்க்க முடியும்.
“நீருக்காய் அவள் நடந்த தூரத்தை
ஒரு நேர்கோட்டில் இழுத்தால்
பூமத்திய ரேகையாகிப் போகும்!”
என்கிறது ஒரு கவிதை. ஆனால், ஔரங்காபாத்து நகரத்தின் அருகில் உள்ள படோடா என்கிற சிற்றூரின் கதை வேறு. சுற்றிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட சிற்றூர்கள் இருந்தாலும் இந்த ஊர் மக்கள் அருகில் உள்ள தண்ணீர்த் தாவருவிக்குச்(Water ATM) சென்று தங்கள் பங்குக் குடிநீரை எடுத்து வருகின்றனர்! பணத்தை விடத் தண்ணீர் மதிப்பு மிக்கது என்கிற அருமையான பாடத்தைப் படோடா மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். நீரைப் பயன்படுத்துவது குறித்த நெறிகளை அவர்கள் சரியாகப் பின்பற்றுகின்றனர். அங்கு தண்ணீருக்கான தணிக்கை முறைகள் கண்டிப்பானவை. அனைத்து வீடுகளிலும், மின்சாரத்திற்கு மானி(மீட்டர்) இருப்பது மாதிரி தண்ணீருக்கும் மானிகள் உண்டு. ஊரில் உருவாகும் ஒவ்வொரு சொட்டுக் கழிவு நீரும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. நீரைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடித் திட்டத்தை படோடா உருவாக்கி விட்டதால் மரத்வாடா பகுதியில் உள்ள மற்ற சிற்றூர்கள் அதைப் பின்பற்றத் தொடங்கி விட்டன.
“இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விடவில்லை. ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்கவும் கழிவுநீர் உட்பட ஒரு துளி நீரும் ஊரை விட்டு வெளியேறாமல் தடுக்கவும் நாங்கள் கடந்த 10-12 ஆண்டுகளாக முயன்று வந்தோம். கடுமையான கட்டுப்பாடுகளின் விளைவாகவே இங்கே தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மரத்துவாடாவில் உள்ள வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்டது. கிடைக்கும் தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்தவோ மறுசுழற்சி செய்யவோ மக்கள் தவறி விட்டனர். வறண்ட நிலத்தில் விந்தைகளை நிகழ்த்த இசுரேலினால் முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது?” எனக் கேட்கிறார் பாசுகர் பெரே-பட்டீல். இவர்தான் 22 மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ள படோடா மாதிரியை உருவாக்கியவர்.
பட்டீல் 7-ஆவது வரை மட்டுமே படித்தவர். உள்ளூர்க் கேடனாக(கேடியாக) இருந்து மக்களை மிரட்டி வாக்குகள் வாங்கி ஊராட்சித் தலைவர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கு முன், பண வலிமையும் அடியாள் வலிமையும் இருந்ததால்தான் மக்கள் தன்னிடம் அஞ்சினர் என்பதை அறிந்து மனம் மாறியவர். திறந்தவெளியில் காலைக்கடன் கழிக்கும் பழக்கத்தை முதலில் மாற்ற முயற்சி எடுத்தார். பின்னர் ஊரின் தண்ணீர்ச் சிக்கலைத் தீர்க்க முன்வந்தார். முதலில் மக்கள் அவருக்கு அஞ்சி அவர் பின் சென்றனர். ஆனால், விரைவிலேயே அவரது நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்புக் கொடுக்கத் தொடங்கினர்.
ஊரின் வழியாக முன்னர் ஓடிக் கொண்டிருந்த காம் ஆறு, சாக்கடை நீர், ஆலைக் கழிவுகள் போன்றவை கலந்ததன் காரணமாகச் சுருங்கிச் சிற்றோடையாக மாறியிருந்தது. கிணறுகளில் தண்ணீர் இல்லை. அரசின் திட்டங்கள் போதுமான நீரைத் தருபவையாக இல்லை. “எனவே, வேறு தீர்வுகளைத் தேட முடிவு செய்தோம். நீரோடையின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டி மழைநீரைச் சேகரிக்கத் தொடங்கினோம். ஊரை விட்டு ஒரு சொட்டு மழைநீரும் வெளியே செல்லாமல் தடுத்தோம். ஊற்றுக் கசிவு நீர்நிலைகளைப் புதுப்பித்ததால் நிலத்தடி நீரின் அளவு உயர்ந்தது” என்கிறார் பெரே பட்டீல்.
ஊரின் கிணறுகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்ததும் நீர் வடிகட்டும் ஆலையை ஊராட்சி நிறுவியது. தண்ணீர் மானியும் தண்ணீர்த் தாவருவியும் வந்தன. இந்தத் திட்டங்களுக்கு அரசின் உதவி இருந்தாலும் முதன்மையான நிதியுதவி ஊர் மக்களிடமிருந்தே வந்தது. இன்று தாவருவி அட்டைகளைப் பயன்படுத்தும் 581 குடும்பங்களுக்கும் 20 புதுப்படி(இலிட்டர்) தூய வடிகட்டிய கனிமநீரை(மினரல் வாட்டர்) ஊராட்சி இலவயமாக வழங்குகிறது. மேற்கொண்டு நீர் வேண்டும் என்றால் 5 உரூபாய் செலுத்தி 1000 புதுப்படி நீரைப் பெறலாம். ஆண்டு முழுதும் ஒரு நாளில் 24 மணி நேரமும் தாவருவி இயங்குகிறது. “அஃது ஒருபொழுதும் காலியாக இருக்காது. எங்களுடைய மொத்த உழைப்பையும் அதில் செலுத்தியிருக்கிறோம்” என்கிறார் தாவருவி அட்டையை அதற்குரிய துளையில் செலுத்தி 20 புதுப்படி நீரை எடுக்கும் இரவீந்திர சாதவு என்கிற இளைஞர். அரசு கொடுக்கும் நீரைத் துவைக்கவும், வீட்டைத் தூய்மை செய்யவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழக ஊர்களும் நகரங்களும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
– பேராசிரியர் கே.இராசு
தகவல் : முதுவை இதாயத்து
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply