தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர்

வடக்கு ஆளுநர்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு!

 வடக்குமாகாண ஆளுநர் தமிழ் மொழியைப் பேச மட்டும் தெரிந்து கொண்டுள்ளாரே தவிர, தமிழர்களின் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இணைப்பாளர் இலீலாதேவி ஆனந்த நடராசா குற்றம்சாட்டினார்.

   கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த  பிப்பிரவரி மாதம் 20ஆம்  நாள்  முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100 ஆவது நாளன்று, வடக்குக் கிழக்கு மாகாண  முறையில் கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இருந்து, ”அரசத் தலைவர் 15 நாள்களுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைச் சந்திக்க ஆவலாக உள்ளார்” என்று குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டிருந்தனர். வடமாகாண ஆளுநர், ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்தில் இருந்து, “ஆளுநர் தமிழ் மொழியைக் கதைக்கப் பழகியுள்ளார். ஆனால் தமிழரின்  சிக்கல்கள் தொடர்பாகப் புரிந்து கொள்ளவில்லை.

  தமிழ் பேசுகின்ற  ஓர் அதிகாரி இவ்வாறான கருத்தைத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள், போர் நிறைவடைந்த பின்னர் ஓமந்தை ஆய்வுச் சாவடியிலும், முகாம்களில் வைத்து கைது செய்யப் பட்டவர்களையும், எங்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களையும் தான் கேட்கின்றோம்.

இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இணைப்பாளர்  இலீலாதேவி ஆனந்தநடராசா தெரிவித்தார்.