தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது

இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன.

மரபுத்தமிழில்  பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர்  முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள்.

பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர்.

மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர்.

சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர்.

சிலர், பெயர்ச் சொற்களைக் குறிக்கையில் அயற்சொற்களைத் தமிழ் ஒலிக்கேற்பத் தமிழில் எழுதித் தமிழைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் சொல்லாக்க முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

இவர்களைப் பாராட்டி ’அகரமுதல’ மின்னிதழ் சார்பில்’இலக்குவனார் விருது’ வழங்க உள்ளோம்.

இவ்விருது  இணைய வழி அனுப்பும் பாராட்டுச்சான்றிதழ். எனவே, உலகின் எப்பகுதியைச் சேர்ந்தவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியான ஒவ்வொருவரும் பாராட்டப் பெறுவர்.

இணையப் பயன்பாடின்றி இவ்வாறு தொண்டாற்றுவோர் இருப்பின் அவற்றை இணைய வாயிலாகத் தெரிவிப்பின் அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பெறும்.

அத்தைகையோர் தங்கள் படைப்பினைப் பயன்படுத்த அகரமுதல இதழுக்கு அனுப்பி வைத்தால் ‘அகரமுதல’ வெளியிடும். அல்லது தாங்கள் விரும்பும்  வேறு தளத்திலும் வெளியிடலாம். அவ்வாறு இணையத்தில் அவர்களின் பதிவுகள் இடம் பெறின் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவார்.  எனவே, நண்பர்கள் அத்தகையோர் இருப்பின் அவர்களையும் ஆற்றுப்படுத்தி இணையப் பயன்பாட்டிற்குத் திருப்ப வேண்டுகின்றோம்.

தமிழ் நாளும் நலிந்துவருதை இத்தகையோர் முயற்சிகளே தடுத்து நிறுத்தும். எனவே, இதனைப் பாராட்டிப் பிறரை இவ்வழியில் திருப்பும் வகையில்  மேற்கொள்ளப்படும் எளிய முயற்சியே இது.

விண்ணப்பிப்போர், தங்கள் படைப்புப் பணி குறித்து விரிவாக உரிய மின்னிணைப்புகளுடன்

‘அகரமுதல’ இதழ் மின்வரிக்குத்   < madal.akaramuthala@gmail.com >

தெரிவிக்க வேண்டும்.

தங்கள் ஒளிப்படத்தையும் பாராட்டிதழில் குறிப்பதற்காகத் தங்களைப்பற்றிய ஐந்து வரி குறிப்பையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிப்போர், தங்கள் பெயரையும் முதல்/தலைப்பு எழுத்து அல்லது முதல்/தலைப்பு எழுத்துகளையும் அயலெழுத்து கலப்பின்றித் தமிழிலேயே குறிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு வேளை இது வரை அவ்வாறில்லாமல் இருந்தால்,

இனி நான் தமிழ் எழுத்துகளைக் கொண்டே என் பெயரை முழுமையாகக் குறிப்பேன்

என உறுதி மொழி இணைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் : மார்கழி 16, 2048 / திசம்பர் 31, 2017

விருதிதழ்களைத் தைத்திங்களில் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

ஆசிரியர்

‘அகரமுதல’