தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன்
தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை
இனப்படுகொலையை விடக் கொடூரமானது!
– திருமாவளவன் கண்டன அறிக்கை
“இலங்கைப் படையினரால் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை இனப்படுகொலையின்பொழுது தமிழ்ப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகத் தென் ஆப்பிரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. அதற்கான சான்றுகளையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைப் படையினரின் இந்தச் செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஈழ இனப்படுகொலையின்பொழுதும் இராசபக்சே ஆட்சியின்பொழுதும் அதன் பின்னர் அமைந்த மைத்திரிபால சிறிசேன அரசின் கீழும் கைது செய்யப்பட்ட, அடைக்கலம் அடைந்த தமிழ்ப் பெண்களைச் சிங்களப் படையினர் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்துப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தினர் என்ற பதைப்பூட்டும் உண்மை இப்பொழுது வெளியாகியுள்ளது. இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஐ.நா. அவையின் ‘பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் குழுவின்’ முன்னர் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘பன்னாட்டு உண்மை-நீதிக்கான திட்ட’த்தின் சார்பில் 55 பெண்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக அளிக்கப்பட்டிருந்தன. அவர்களில் நாற்பத்தெட்டு பேர் இராசபக்சே ஆட்சியின்பொழுது கைது செய்யப்பட்டவர்கள், ஏழு பேர் தற்பொழுது நடைபெறும் சிறிசேனவின் ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள். வாக்குமூலம் அளித்திருக்கும் 29 பெண்கள் வலுக்கட்டாயமாக ஊர்திகளில் கடத்தப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, அடையாளம் தெரியாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பத்துப் பேர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். தம்மை அடைத்து வைத்திருந்தவர்களுக்குக் கையூட்டுக் கொடுத்தே இந்தப் பெண்கள் தப்பித்து வந்துள்ளனர். இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட படை அலுவலர்களின் பெயர், பதவி முதலான விவரங்களும் சான்றுரைஞர்களின் வாக்குமூலங்களோடு இணைத்து அளிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடுமையானது. இப்பொழுதாவது பன்னாட்டுக் குமுகமும்(சமூகமும்) ஐ.நா. அவையும் இலங்கைப் போர்க் குற்றங்களிலும் இனப் படுகொலையிலும் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்கவேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.
என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாக்கம்: கலைமதி,
நன்றி: இந்தியா ஒன்று – தமிழ், பிப்பிரவரி 21, 2017.
Leave a Reply