73clash

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் தலைவர் துணைத்தலைவர் இடையே உள்ள மோதல்களால் ஊராட்சிப் பணிகள் பாதிப்படைந்து வருகின்றன.

 தேவதானப்பட்டி அருகில் உள்ள எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலைவர்களுக்கும் துணைத்தலைவர்களுக்கும் உச்சகட்டப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும்பாலான பணிகளுக்குக் காசோலையில் கையெழுத்திட தலைவர் வந்தால் துணைத்தலைவர் வருவது இல்லை; துணைத்தலைவர் வந்தால் தலைவர் வருவது கிடையாது. இந்நிலையில் சில ஊராட்சிகள் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் பெண்கள் தொகுதியாகவும், சில ஊராட்சிகள் தனி ஊராட்சியாகவும் மாற்றப்படஉள்ளன. இதனால் பல ஊராட்சித்தலைவர்கள் மீண்டும் ஊராட்சித் தலைவர்களாக வருவதற்கு வாய்ப்பில்லை. இதனால் பொதுமக்கள் எந்தக் குறை கூறினாலும் அதனை ஏற்றுச் சரிவர செய்வது கிடையாது.

  இந்நிலையில் ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சித்தலைவர், துணைத்தலைவர், ஊராட்சிச் செயலாளர் ஆகிய மூன்று பேரும் போலி ஆவணங்கள் உருவாக்கிப் பலஇலட்சம் மோசடி செய்துள்ளனர். இதனை அந்த ஊராட்சி உறுப்பினர்களே ஆதாரமாகப் புகார் கொடுத்து ஊராட்சிச் செயலாளர்கள் சிலர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்பொழுது கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு ஊராட்சித்தலைவர்கள் முன்வருவது கிடையாது. இதனால் பல ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

  எனவே மாவட்ட நிருவாகம் போர்கால அடிப்படையில் ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு வரவு, செலவு கணக்குகளைத் தணிக்கை செய்யவேண்டும் என்றும் ஊராட்சிகளில் அடிப்படைச்சிக்கலகளைக் களைய முன்வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

73vaigaianeesu