திருக்குறள் கழகத்தலைவர் பா.இராமையா காலமானார்
புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் தலைவர் பா.இராமையா அவர்கள் 5.2.14 புதன்கிழமை இரவு காலமானார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த நெய்வேலி என்னும் சிற்றூரில் 15.03.1935 இல் பிறந்தவர். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர் புதுக்கோட்டை இந்தியன் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கல்லூரியில் பயிலும்பொழுதிலிருந்தே நல்ல தமிழுணர்வும் பகுத்தறிவும் கொண்டவராக விளங்கினார்.
திருக்குறளின் பால் தீராக்காதல் கொண்டிருந்த இவர் தனது பணிநிறைவிற்குப் பின்னர் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனரால் தொடங்கப்பட்டு இயங்கி வந்த திருக்குறள் கழத்தின் தலைவராக 1999 முதல் செயல்பட்டு வந்தார். தமிழின்பால் கொண்ட தீவிர பற்றால் புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் தனது கட்டடத்தின் ஒரு பகுதியினை “ பாலா தமிழரங்கம்“ என அமைத்து தமிழுணர்வாளர்கள், தமிழ்ச்சான்றோர் படங்களை அங்கு காட்சிப் படுத்தி வைத்துள்ளார். தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்ச் சான்றோர்களை அவ்வரங்கிற்கு அழைத்துத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டங்களில் உரையாற்றச் செய்தார்.
அவ்வரங்கிலேயே மூத்தகுடிமக்கள் அமைப்பினை நிறுவி அதன் நிறுவனராகவும் இருந்து அவ்வமைப்பி்ன் திங்கள் கூட்டங்களின்மூலம் மூத்த குடிமக்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டார். தமிழிசைச் சங்கத்தினை அவ்வரங்கில் அமைத்து அதன் மூலம் சிறந்த தமிழறிஞர்களை வைத்து நிகழ்வுகளை நடத்தியவர்.
கடந்த திசம்பர்- 2010 -இல் செம்மொழி மததிய உயராய்வு மையத்தோடு இணைந்த திருக்குறள் கழகத்தின் சார்பில் ‘சங்கத்தமிழ் பயிலரங்கம்’ ஒன்றினைப் பத்துநாள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தி மக்களின் பாராட்டுதலைப் பெற்றார். ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டுவிழாவினை நகர்மன்றத்தில் தமிழ்ச்சான்றோர்களை அழைத்து நடத்தி வந்தார்.
கடந்த 23.11.2013 அன்று தனது திருக்குறள் கழகத்தின் 59 -வது ஆண்டு விழாவினை நகர்மன்றத்தில் நடத்தி அதில் ‘திருக்குறள் ஆங்கில உரை விளக்கம்’ , ‘அறமும் புறமும்’ ஆகிய தம் நூல்களை ஊடகவியலார் க.அய்யநாதன் அவர்களை வைத்து வெளியிட்டார். கலையின் பால் ஆர்வம் கொண்ட இவர் தனது திருக்குறள் கழக ஆண்டுவிழாக்களில் பரதநாட்டியம், ஓகம், மணிச்சுடர் கலைக்கூட நாடகங்களை அரங்கேற்றி மகிழ்ந்ததோடு சில நாடகங்களில் சிறப்புப் பாத்திரங்களேற்று நடித்துள்ளார்.
அனைத்திற்கும் மேலாக புதுக்கோட்டை சின்னப்பா பூங்காஅருகே 25.6.2012 -இல் திருவள்ளுவர் சிலையினைப் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே விடாது முயன்று நிறுவியதில் பெரும்பங்கு ப.இராமையாவையே சாரும். இவரது இறுதி ஊர்வலம் கறம்பக்குடி அருகேயுள்ள அவரது சொந்த கிராமமான நெய்வேலியில் வியாழக்கிழமை (6.2.2014) மாலை நடைபெற்றது. அதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த இலக்கிய, குமுகாய ஆர்வலர்கள், தமிழுணர்வாளர்கள் திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டையின் அனைத்து இலக்கிய, குமுகாய அமைப்புகளோடு தொடர்புகொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்த இவர் என்றும் இலக்கிவாதிகளின் நெஞ்சங்களில் நீ்ங்கா நினைவிலிருப்பார் என்பது திண்ணம்.
நன்றி, மோகன்ராம், புதுக்கோட்டை, தினமணி
Leave a Reply