துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி
துபாயில் நடைபெற்ற
செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி
துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா சிரீராம(ஐய)ரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக இருந்தன. மலர் வணக்கம், அலாரிப்பில் தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம், கீர்த்தனம், தில்லானா என சிரத்தா அயராமல் ஆடிய அனைத்து நடனங்களும் வெகு நளினமாகக் காண்போர் கண்களைக் கவர்ந்தன. அவர் ஆடிய ஆண்டாள் கௌத்துவமும் ‘சின்னஞ்சிறு கிளியே’ பதமும் அவற்றில் அவர் வெளிப்படுத்திய பாவமும் அனைவரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.
விழாவின் ஏற்பாடுகளைச் சிரத்தாவின் பெற்றோர் திருமதி பிரேமா சிரீராமாவும் திரு சிரீராம சீனிவாசனும் சிறப்பாகச் செய்திருந்தனர் .
செல்வி சிரத்தா, குரு திருமதி மீனாட்சி சீனிவாசு நடத்திவரும் சுவராலயா நடனப்பள்ளியில் கடந்த 7 வருடங்களாகப் பரதநாட்டியம் பயின்று வருகிறார். செல்வி சிரத்தா சிறு அகவை முதலே பல மேடைகளில் நடனமாடித் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சம்பவாமி யுகே யுகே, விவேக் 150 போன்ற நாட்டிய நாடகங்களிலும் பங்கேற்று இருக்கிறார். கடந்த வருடம் விபிசியோர் நடத்திய நருத்தன சாம்ராட்டு போட்டியில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றார். இவர் கருநாடக இசையையும் முறையாகக் குரு மீனாட்சி சீனிவாசு இடம் முறையாகப் பயின்று வருகிறார்; மேடைகளில் பல பசனைப் பாடல்களும் , திருப்புகழ், அட்டபதி பாடல்களும் சத்யா சாய் அமைப்பின் சார்பாகப் பல பசனை பாடல்களும் பாடி இருக்கிறார். சிரத்தா கூடைப் பந்து விளையாட்டிலும் கை தேர்ந்தவர். ஆங்கிலக் கவிதை எழுதுவதிலும் திறமை பெற்றவர். நீச்சல், ஓவியம் இவரின் பொழுதுபோக்கு. இவர் பேச்சுப் போட்டியிலும் பல பரிசுகளை வாங்கி உள்ளார். பல துறைகளிலும் சிறந்த விளங்கும் சிரத்தாவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் 9ஆவது படிக்கும் செல்வி சிரத்தா எதிர்காலத்தில் நாட்டிய உலகில் சிறந்த இடத்தை அடைவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை
வாழ்த்து தெரிவிக்க :
Leave a Reply