seithi_sirpam_vaigaianeesu+01

  தேவதானப்பட்டி பகுதியில் சிற்பக்கலை அழிந்து வருகிறது. அதனைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதியில் சிலைகள் வடிவமைக்கத்தேவையான திறனுடைய கற்கள் அதிகம் உள்ளன. மறைந்த முன்னாள்  தலைமையாளர் இராசீவு காந்தி அவர்களுக்குத் திருப்பெரும்புதூரில் சிலை அமைக்க இப்பகுதியில் இருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அவ்வளவு பெருமை வாய்ந்த கற்கள் இப்பகுதியில் உள்ளன.

  இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்கள், கற்சிலைகள் அனைத்தும் அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்த கற்களைக் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டன.

  இருப்பினும் தற்பொழுது ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா,  பசுமலைப்பகுதிகளுக்குத்தான் சிலை வடிவமைக்கச் செல்கின்றனர். இதற்குக் காரணம் இப்பகுதியில் உள்ள சிற்பிகள் போதிய வருமானம் இல்லாததால் மாமல்லபுரம், குடுமியான்மலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று விட்டனர். இத்தொழிலை நம்பி ஒரு சில குடும்பங்கள் மட்டும் வாழ்ந்து வருகின்றன.

  அரசு சார்பில் ஊக்குவித்தால் சிற்பக்கலைக்கூடம் இப்பகுதியில் புகழ்பெறும் இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட நிருவாகமும் கலைபண்பாட்டுத்துறையும் நலிந்து வரும் சிற்பக்கலையை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-வைகை அனீசு