71sub_registraroffice,vathalakundu

தேவதானப்பட்டிப் பகுதியில் இடைத்தரகர்கள் மூலம்

நிலங்களைக் கைப்பற்றும் கும்பல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நிலங்களை வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் சேர்ந்து நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, தேவதானப்பட்டி கிழக்குப்பகுதி, புல்லக்காபட்டி, அட்டணம்பட்டி, கோட்டார்பட்டி முதலான ஊர்களுக்கு வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான் பத்திரப்பதிவு நடக்கும். கடந்த 3 ஆண்டுகளாகப் போதியமழையின்மையால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் இடைத்தரகர்கள், பத்திரப்பதிவு செய்பவர்கள் ஆகியோர் இணைந்து வெளியூர் சென்றவர்கள், வழித்தோன்றல் இல்லாதவர்கள், முதியோர் ஆகியோர் நிலங்களை, ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து உரிமையாவணம், குறிப்பாவணம் போன்றவற்றை மாற்றிப் பல நூறு காணி நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்துவிட்டனர். ஒரு சிலர் அந்த நிலங்களைப்பட்டயம்(பட்டா)போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

  3 ஆண்டுகள் கழித்துத் தங்கள் இடத்தைப் பார்க்கும்போது வேறு ஒருவர் கவர்ந்துஆக்கிரமித்து இருப்பதைக்கண்டு பாதிக்கப்பட்டோர் வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பார்க்கும்போது அதில் உரிமையாவணம்(பட்டா), குறிப்பாவணம்(சிட்டா) போன்றவை மாற்றம் செய்யப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் ஒரு சிலர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்கள்.

 எனவே போலி ஆவணம், உரிமையாவணம், குறிப்பாவணம் உருவாக்கும் மருமக் கும்பல் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் நிலக்கவர்வு பிரிவிற்கும், முதல்வர் பிரிவிற்கும் முறையீடு அனுப்பியவண்ணம் உள்ளனர். காவல்துறையினர் தீர விசாரித்தால் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், இடைத்தரகள் ஆகியோர் அவர்களின் அரசியல் பின்னனி போன்றவை வெளிப்படும்.

71vaigainaneesu