தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு
தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி
– த.மா.கா. சார்பில்
திருச்சியில் மாபெரும் மாநாடு
6 கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.
மக்கள் நலக்கூட்டணி:
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் அமைக்கப்பெற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விசயகாந்து, தலைமையில் மாநாடு நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் இராமகிருட்டிணன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தனித்தனியாகச் சூறாவளிபரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநாடு
மாமண்டூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 கட்சி தலைவர்களும் ஒன்றாகச் சேர்ந்து உரையாற்றிய மாநாடு நடந்தது. அதன்பின் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்ளாமல் தனித்தனியாகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பரப்புரை மேற்கொண்டனர். இந்த நிலையில் 6 கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் திருச்சியில் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு நடத்த அக்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காகத் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 15 காணி பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. அதன்படி மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு அன்று மாலை நடந்தது. மாநாட்டுத் திடலில் 6 கட்சி தலைவர்களின் உருவப்படங்கள் அடங்கிய வெட்டுருக்கள், விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
வேட்பாளர்களை ஆதரித்து…
தலைவர்கள் பேசும் மேடையும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் அமருவதற்கு வசதியாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நண்பகல் முதலே தொண்டர்கள் வரத்தொடங்கி மாநாட்டுத் திடலில் அமர்ந்தனர். மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி மின் விளக்குகள் போடப்பட்டிருந்தன. தொண்டர்களின் ஊர்திகளை நிறுத்தத் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாநாடு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கியது.
மாநாட்டில் திருச்சி கிழக்குத்தொகுதி வேட்பாளர் மரு.இரொகையா (ம.தி.மு.க.), மேற்குத்தொகுதி வேட்பாளர் சோசப்பு செரால்டு (தே.மு.தி.க.), திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் (தே.மு.தி.க.), திருவரங்கம் தொகுதி வேட்பாளர் வை.புட்பம் (இந்தியப்பொதுவுடைமை), முசிறி தொகுதி வேட்பாளர் இராசசேகரன் (த.மா.கா.), இலால்குடி தொகுதி வேட்பாளர் செயசீலன் (மார்க்சியப் பொதுவுடைமை) மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் பாபு (தே.மு.தி.க.), துறையூர் தொகுதி வேட்பாளர் சுசாதேவி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), மணப்பாறை தொகுதி வேட்பாளர் கிருட்டிணகோபால் (தே.மு.தி.க.) ஆகியோரை அறிமுகப்படுத்திக் கட்சித் தலைவர்கள் பேசினர்.
விசயகாந்து தலைமை
மாநாட்டிற்கு விசயகாந்து தலைமை தாங்கிப் பேசினார். திருச்சி மாநகர் மாவட்ட த.மா.கா. தலைவர் சாருபாலா தொண்டைமான் முன்னிலை வகித்துப் பேசினார். அதன்பின் வைகோ, வாசன், இராமகிருட்டிணன், தொல்.திருமாவளவன், முத்தரசன், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு ஆகியோர் பேசினர். முன்னதாகத், திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு வரவேற்றுப் பேசினார். முடிவில் மாநகர் மாவட்டத் தே.மு.தி.க. செயலாளர் விசயராசன் நன்றி கூறினார். மாநாட்டில் 6 கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நன்றி : தினத்தந்தி
படங்கள் நன்றி: செய்தி 7 தமிழ்த்தொலைக்காட்சி &
https://www.youtube.com/watch?v=wctu25KFE5Q
Leave a Reply