தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!
தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!
அந்தோ, வள்ளுவராக வாழ்ந்த தமிழர் பெருமகனார் சிகாகோ இராம்மோகன் அவர்கள் மறைந்தாரே!
சிகாகோவில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தமிழார்வலரும், புரவலருமான நண்பர் இராம்மோகன் அவர்கள் 12.12.2019 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.
வள்ளுவர் தம் குறளை உலகெங்கும் பரப்பிட வேண் டும் என்ற பெரு நோக்கோடு, அதற்கெனத் தனது வாழ்நாளில் பிற்பகுதியைப் பெரிதும் செலவிட்ட தொண்டறச் செம்மல் அவர்!
செட்டி நாடு கானாடுகாத்தான் பகுதியைச் சார்ந்த அவர் ஒரு தலைசிறந்தபண்பாளர்; மனிதநேயர். எவரிடத்திலும் பான்மையோடு பழகுபவர்.
திருக்குறளை மற்றவர்கள் வாசிப்பார்கள்; இராம்மோகன் அவர்களோ சுவாசிப்பார்கள் – தான் மட்டுமல்ல; உலகமே வள்ளுவரின் வாய்மை மொழிப் படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, தனது உழைப்பு, பொருள் அத்துணையையும் செலவழித்த செந்தமிழ்ச் செல்வர் அப்பெருந்தகை!
6.11.2019 சிகாகோவில் நடந்த பெரியார் – அண்ணா விழாவினை முடித்து, உடல் நலம் குன்றி, வீட்டில் இருந்த இராம்மோகன் (அழகப்பன்) அவர்களை மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களுடன் சென்று, நானும், எனது வாழ்விணையர் மோகனா, அருள், அசோக்கு ஆகியவர்களுடன் நலம் விசாரித்தபோது, ஏறத்தாழ 30 மணித் துளிகளுக்கு மேல் எங்களிடத்தில் உரையாடினார். பிறகு அவரிடமும், அவரது வாழ்விணையர் திருமதி மீனா இராம்மோகன் அவர்களிடமும் விடை பெற்றுத் திரும்பினோம்.
எப்படியும் மீண்டும் தொண்டறத்தைத் தொடர்வார் என்று நம்பித் திரும்பினோம்.
பெருத்த ஏமாற்றம்தான். எனினும் இயற்கையை எண்ணி ஆறுதல் பெறுவதைத் தவிர வேறு வழி என்ன?
தனக்குப் பிறகும் தனது செல்வத்தில் ஒரு பகுதி தமிழ்த் தொண்டுக்குப் பயன்பட வேண்டும் என்ற திட்டத்தைப் பெரிதும் எங்களிடம் விளக்கினார்.
நான் முதன் முதலில் சிகாகோ சென்றபோது (1986இல்) அவரது இல்லத்தில் தங்கியதை நினைவு கூர்ந்து நன்றி சொன்னபோது, மிகவும் வியந்தார்!
அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி மீனா, அவரது பிள்ளைகள், குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல் ஆறுதல் கூறுகிறோம்.
அந்த தமிழ்த் தொண்டறச் செம்மலுக்கு நமது இயக்கச் சார்பில் வீர வணக்கம்.
– கி.வீரமணி, ஆசிரியர், விடுதலை
தமிழ் ஆர்வலர் முனைவர் பொறியாளர் அழகப்பா இராம்மோகன் 2000 ஆண்டு திருக்குறள் பொதுமறை என்ற பெயரில் திருக்குறள் நூலை 1,824 பக்கங்களுடன் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நான்கு பக்கங்களில் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் போன்றவற்றுடன் உயர்ந்த தரத்தில் விவிலியத் தாளில் அச்சிட்டுச் சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின் கருத்துகளை 108 மந்திரங்களாக்கி அதையும் பத்து நிமிடம் ஓடக்கூடிய குறுந்தகடு, ஒலியிழையாக வெளியிட்டிருக்கிறார். திருக்குறள் – தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு(2000), தொழில் முனைப்பாற்றலும் தமிழர்களும்(2005), நினைக்கப்பட வேண்டியவர்கள்(2002) முதலிய நூல்களின் ஆசிரியரும்கூட.
அழகப்பா இராம்மோகன் (பிறப்பு 1939) பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கானாடுகாத்தான்.ஆனால், பிறந்தது மலேசியாவின் பினாங்கு. எனினும் ஐக்கிய அமெரிக்காவின், இல்லினாய்சு மாநிலத்தில் சிகாகோ நகரில் வாழ்ந்து தொண்டாற்றியவர். இவர் தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உதவுவதற்காகவும் உலகத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி அதன் இயக்குநராகச் செயல்பட்டவர்.
அத்தகைய பெருந்தகை அவர்கள் இன்று(கார்த்திகை 29, 2050/15.12.2019) அமெரிக்காவில் காலமானார். அன்னாருக்கு எனது இறுதி அஞ்சலிகள்!
கரூரில் உள்ள வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரியில் அழகப்பா இராம்மோகன் அவர்களை நேரில் சந்தித்து அவரிடத்தில் ஆயிரம் உரூபாய் கொடுத்து அவர் வெளியிட்ட திருக்குறள் நூலை பெற்றுக் கொண்ட நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது. இனிய இயல்பு கொண்ட அன்னாரது புகழ் வாழ்க!
– தமிழ்நல வழக்குரைஞர் இராசேந்திரன், 9787933344
Leave a Reply