68dumdum08

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்

  தேவதானப்பட்டி அருகே உள்ள தம்தம்(டம்டம்)பாறைப் பகுதியில் கடந்த அத்தோபர் மாதம் 27 ஆம்நாள் கனமழை பொழிந்ததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இயற்கையாக உருவான ஊற்றுகளால் மேலிருந்து மரங்கள் அடித்து வரப்பட்டு, தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைத்ததால் பல இடங்களில் சாலை போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் கொடைக்கானல் செல்லமுடியாமல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அல்லல்பட்டனர். இதனால் கொடைக்கானலுக்குச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பழனி, தாண்டிக்குடி வழியாகச் சென்றனர்.

  தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் பணிகளைச் செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டனர். அதன்பின்னர் சில வாரங்களுக்குப் பின்னர் இடைக்காலகமாகச் சாலைகள் சீரமைக்கப்பட்டு மணல் மூட்டைகள் முதலானவை கொண்டு சாலை சரிசெய்யப்பட்டது. அதன்பின்னர்ப் பணிகள் நடைபெறவில்லை. மேலும்  பேரூர்திகள், பேருந்துகள் இயக்கும் போது பயந்தே செல்லவேண்டியுள்ளது. கனமழை காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை. இன்னும் ஒரிரு வாரங்களில் கொடைக்கானலில் கோடைப்பருவம் நடைபெறவுள்ளது. இதனால் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதற்கு இந்தச் சாலை உகந்ததல்ல. இதன் தொடர்பாகப் பூலத்தூரைச்சேர்ந்த கோகுல கிருட்டிணன் கூறுகையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பூலத்தூர், தாண்டிக்குடி, பெருமாள்மலை, அடுக்கம் முதலான பகுதிகளில் இருந்து நாள்தோறும் உருளைக்கிழங்கு, சீமை அவரை, செம்மஞ்சள் முள்ளங்கி போன்றவை   சுமையூர்திகள் மூலம் மதுரை, வத்தலக்குண்டுவிற்கு எடுத்துவரப்படுகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஊர்திகள் இயக்கும்பொழுது ஓட்டுநர்கள் பயந்தே வாகனத்தை இயக்கும் நிலை உள்ளது. எனவே போர்கால அடிப்படையில் சாலையைச் சரிசெய்யவேண்டும் என்றார். இதன் தொடர்பாகத், தேனிமாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது, அது திண்டுக்கல் சரகத்திற்கு உட்பட்டது எனக்கூறிவிட்டனர். எனவே இரண்டு மாவட்ட அதிகாரிகளின் பனிப்போரால் பாதிக்கப்படுவது பொதுமக்களே. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.