பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் தேனி மாவட்டம்
தேவதானப்பட்டி பகுதி சிறுவேடந்தாங்கலாக அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காட்சியளிக்கும்.
காரணம் இப்பகுதியில் வைகை ஆறு, மஞ்சள் ஆறு, சோத்துப்பாறை ஆறு, கும்பக்கரை அருவி, எலிவால் அருவி எனப் பல அருவிகளும் மத்துவார்குளம் கண்மாய், வீரன் கண்மாய், குள்ளப்புரம் கண்மாய், செங்குளத்துப்பட்டி கண்மாய், சில்வார்பட்டி கண்மாய் என ஏராளமான கண்மாய்களும் குளங்களும் அதிக அளவில் உள்ளன.
இப்பகுதியில் மழை பொழிந்தால் நீர் நிறைந்து காணப்படும். இதனால் கொக்கு, காடை, நாரை, கூழக்கிடாய், வெளிநாட்டுப்பறவைகள் முதலியன இனப்பெருக்கத்திற்குக் கண்டம் விட்டு கண்டம் வந்து இங்குள்ள மரங்களில் தங்கும். அதிகாலையிலும் மாலைவேளைகளிலும் இக்கண்மாய்கள் சிறுவேடந்தாங்கலாகக் காட்சியளிக்கும்.
இவை தவிர நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான புளியமரங்கள், ஆலமரங்கள், அரசமரங்கள் வெட்டப்பட்டன. இதனால் பறவைகள் தங்குவதற்குக் கண்மாய்களில் உள்ள கருவேலம் மரம், முள்செடிகளில் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறு மிகுதியான பறவைகள் வந்து தங்குவதால், இப்பகுதியைச் சிறுவேடந்தாங்கல் என அழைக்கின்றனர்.
அதே வேளையில் மதுஅருந்துபவர்களும் சமூக விரோதிகளும் இப்பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். எனவே வனத்துறையினர் சுற்றுக்காவல் பணிமேற்கொண்டு பறவையினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply