பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!
பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை!
– கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!
கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலில் நூற்று ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இன அழிப்பு நிகழ்வு நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்றும் இலங்கையில் நிகழும் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான சிங்களப் படைகளின் பாலியல் வெறியாட்டம் பற்றி வெளியாகியுள்ள செய்தி உலகத் தமிழர் நெஞ்சங்களில் நெருப்பைக் கொட்டியிருக்கிறது.
பாலியல் வன்முறை
அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செய்தித்திரட்டு நிறுவனத்தின் இயக்குநர் சசுமின் சூக்கா அவர்கள், சிங்களப் படையின் கட்டுப்பாட்டில் தமிழ்ப் பெண்களைக் கொடுமைப்படுத்துவற்கெனவே 55 பாலியல் வதை முகாம்கள் இன்று உள்ளதாகவும் அங்கு சிங்களப் படை உயர் அலுவலர்கள் அன்றாடம் சென்று பாலியல் வன்கொடுமை வெறியாட்டம் போடுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
முன்பு சப்பானியப் படைகள் கொரியாவில் மகிழ்வாய்ப்பு முகாம்களை நிறுவி அங்கு கொரியப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தபொழுது உலகமே கொந்தளித்தெழுந்தது. அதை விடக் கொடுமையான நிகழ்வாக, இன்று 55 பாலியல் வன்கொடுமை முகாம்களில் போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் செய்தி வெளியாகியுள்ளது.
இருண்ட அறை
“சிங்களப் படையின் படைத்துறைப் பணித்தலைவர்(Major) ஒருவர் நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை முகாமுக்கு வந்தார். மீன் கடையில் மீன்களைத் தேர்வு செய்வது போல் அவருக்குப் பிடித்தமான பெண்ணைத் தேர்வு செய்யத் தொடங்கினார். நான்தான் அம்முறை அகப்பட்டேன். இருண்டு கிடந்த ஓர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டபொழுது பிற பெண்களின் கதறலையும் என்னால் கேட்க முடிந்தது” என்று தமிழ்ப் பெண் ஒருவர் கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சசுமின் சூக்கா.
மகிந்த இராசபக்சவின் காலத்தில் தமிழ்ப் பெண்களைக் கொடுமைப்படுத்துவதற்காகவே இப்படி 48 பாலியல் வதை முகாம்கள் இருந்ததாகவும் மைத்திரியின் காலத்தில் மேலும் 7 முகாம்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்களப் படை வெறி
புத்த-சிங்கள அரசின் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான இந்தப் படை வெறிக் கொட்டத்தைத் தமிழீழ மக்கள் எந்தக் காலத்திலும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை இவ்வேளை தெள்ளத் தெளிவாக இந்திய ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
முள்ளி வாய்க்கால் போரின்பொழுது நடைபெற்ற கொலை – பாலியல் வன்கொடுமை போன்ற போர்க்குற்றங்களுக்கு உலக உசாவல் (விசாரணை) தேவை என்று மனித உரிமை நிறுவனங்கள் பலவும் கேட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சிங்கள அரசு உள்ளக உசாவல் நடத்தலாம் என்று கூறிக் கொலைகாரனையே நீதியரசனாக்கியது.
இன்று கூட, போர்க் காலத்தில் சிறைப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்களை வைத்து சிங்களப் படை அலுவலர்களுக்குப் பாலியல் விருந்து படைத்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசு அங்கு போர்க் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வதைகளை எவ்வாறு உசாவும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் எண்ணிப் பார்க்க வேண்டும்”.
இவ்வாறு கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கூறியுள்ளார்.
– மாலை முரசு, பிப்பிரவரி 24, 2017.
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply