பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்!’: முதல்வரின் அறிவுரைக் கதை
சென்னை : “வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது வருத்தப்படாதீர்; முயலுங்கள்! அதைவிடப் பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்,” என, முதல்வர் செயலலிதா, அறிவுரை வழங்கினார்.
சென்னையில், மூன்று அமைச்சர்கள் – புதுச்சேரி ச.ம.உ. இல்லத் திருமண விழா, நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் செயலலிதா, மணமக்களை வாழ்த்திப் பேசும்போது, கதை கூறி, அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.அக்கதை வருமாறு:
ஒரு கணிணி நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்குப், புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும், அனைவரின் மின்னஞ்சல் முகவரியை கேட்டார். கணிணி குறித்து, எதுவும் தெரியாத, தரை துடைக்கும் பணியாளருக்கு, மின்னஞ்சல் முகவரி கிடையாது. அதை மேலாளரிடம் தெரிவித்தார். “கணிணி நிறுவனத்தில், வேலை பார்ப்பவருக்கு, மின்னஞ்சல் முகவரி இல்லை என்றால் எப்படி?’ எனக் கூறி, அந்தப் பணியாளரை, மேலாளர் வேலையில் இருந்து நீக்கினார். வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன் சேமிப்பில் இருந்த, 1,000 உரூபாயைக் கொண்டு, சந்தையில், வெங்காயம் வாங்கினார். அதைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு, எடுத்துச் சென்று, கூவி கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வணிகரானார்.
இச்சூழ்நிலையில், ஒரு வங்கியில், கணக்கு தொடங்குவது தொடர்பாக, வங்கி ஊழியர், அந்த வணிகரைச் சந்தித்தார். கணக்கு தொடங்குவதற்கான விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, மின்னஞ்சல் முகவரியை எழுதுவதற்காக, முகவரியைக் கேட்டார். அதற்கு, அந்த மனிதர், “எனக்குக் கணிணி குறித்து எதுவும் தெரியாது. எனவே, மின்னஞ்சல் முகவரி இல்லை” என விடை அளித்தார். உடனே, அந்த வங்கி ஊழியர், ” மின்னஞ்சல் முகவரி இல்லாமலே, இந்த அளவு முன்னேறி இருக்கிறீர்கள். உங்களுக்குக் கணிணி, மின்னஞ்சல், இணையம் குறித்துத் தெரிந்திருந்தால், எந்த அளவு முன்னேறி இருப்பீர்கள்?’ என, வியப்பாகக் கேட்டார்.
அதற்கு அந்த வெங்காய வணிகர், “அது தெரிந்திருந்தால், ஒரு கணிணி நிறுவனத்தில், தரை துடைத்துக் கொண்டிருப்பேன்‘ என்றார். எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது, வருத்தப்படாதீர்; முயலுங்கள். அதைவிடப் பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும். இது மணமக்களுக்கு மட்டுமல்ல; இங்குள்ள எல்லோருக்கும் பொருந்தும்.” இவ்வாறு, முதல்வர் செயலலிதா பேசினார்.
Leave a Reply