பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர்
தேனிஅருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர் உள்ளது.
பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் வணிக நிமித்தம் காரணமாகப் பெங்களுர், மைசூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதே போல அண்டை மாநிலமான கேரளாவிற்கும் வேலைக்காகச் சென்றுவிடுவார்கள்.
வருடத்தில் பொங்கல், இரம்சான், ஈகைத்திருநாள் (பக்கிரீத்து), தீபாவளி முதலான பண்டிகையின்போது மட்டும் அனைவரும் ஒன்று கூடுவார்கள்.
இந்நிலையில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறைவு உள்ளது. இதனால் பொதுமக்களின் அடிப்படைச்சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி, மின்வசதி என எதுவும் செய்யப்படாமல் உள்ளது.
மேலும் பகலில் ஊராட்சி அலுவலகமாகவும் இரவு நேரத்தில் மதுபான அருந்தகமாகவும் மாறிவருகிறது. இரவில் மதுஅருந்திவிட்டு ஊராட்சி அலுவலகத்தினுள் மதுக்குப்பிகள் தண்ணீர்ப்பைகள் போன்றவற்றைப் போட்டுவிடுகிறார்கள் மதுப்பிரியர்கள். இதனால் பகல்வேளையில் சொத்துவரி குழாய்வரி கட்ட வரும் பெண்கள் மதுபானக் கெடுநாற்றத்தால் முகம் சுளிக்கின்றனர்.
மேலும் சாக்கடைநீர், மழை நீர் ஊராட்சி அலுவலகம் முன்பு பலநாள் தேங்கியிருப்பதால் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனால் என்புமுறிவுக் காய்ச்சல் பரவும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிருவாகம் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply