போலி எண் தகட்டுடன் உலாவரும் ஈருருளிகள்!
போலி எண் தகட்டுடன் உலா வரும் இருசக்கர வாகனங்கள் – மோதலில் காயமடைந்தவர்கள் இழப்பீடு பெற முடியாமல் தவிப்பு
தேவதானப்பட்டிப் பகுதியில் போலி எண் தகட்டுகளுடன் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் உலாவருகின்றன.
தேவதானப்பட்டிப் பகுதியில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடாகா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நிதித் தொழில், கட்டடம் கட்டும் தொழில், தோட்ட வேலைகள், முறுக்குத்தொழிற்சாலை போன்ற பணிகளுக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் அப்பகுதியில் நிதியுதவி பெற்று வாகனங்களை வாங்கி இரண்டு தவணை அல்லது மூன்று தவணை கட்டிவிட்டு இரவோடு இரவாக வானகத்துடன் தேவதானப்பட்டிப் பகுதிக்கு வந்துவிடுகின்றனர். ஒரு சிலர் அண்டை மாநிலத்தில் உள்ள இரண்டு சக்கர வானங்களைத் திருடிவந்துவிடுகின்றனர்.
நல்ல நிலையில் உள்ள வண்டிகளில் காலக்கெடுமுடிந்த வண்டி எண்களின் தகட்டுகளைப் பொருத்திவிடுகின்றனர். இவ்வாறான வண்டிகளைப் பால்விற்பனை செய்பவர்கள், நிதிநிறுவனம்நடத்துவோர், மரம் வெட்டும் தொழிலில் உள்ளோர் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட வாகனங்களால் ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ அவையே விபத்திற்குள்ளானாலோ காவல்துறையில் புகார் பதிவு செய்யும் போது அதில் காப்பீடு, வாகன உரிமையாளர்கள் விவரம் போன்றவை முன்னுக்குப் பின் முரணாக இருக்கும். அதன் பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்து தப்பித்துவிடுகின்றனர்.
ஒரு சிலர் வாகனத்தை மோதிவிட்டுத் தலைமறைவாகின்றனர். காவல்நிலையங்களில் புகார் கொடுத்தால் மோதி விட்டுச் சென்ற வாகனம் அல்லது அடையாளம் தெரியாத வாகனம் என வழக்கு பதிவு செய்து விடுகின்றனர். எனவே வட்டாரப்போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் அடிக்கடி ஊர்திச்சோதனையில் ஈடுபட்டுப் போலி எண்தகட்டுகளுடன் வலம் வரும் ஊர்திகளைப் பறிமுதல் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
Leave a Reply