ம.ந.கூட்டணிமாநாடு ூmanakuuttanai_maanadu

”மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்”

– வைகோ

  திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக மாறிமாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி செய்து விட்டு, அவர்களுக்குள் ஒருவரையொருவர் குற்றஞ் சொல்லி வருகின்றனர். இரு கட்சிகளின் அரசியலை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர். தமிழக மககள் நேர்மையான, தூய்மையான நல்லாட்சியை விரும்புகின்றனர். அதற்கு மக்கள் நலக்கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரத்தயாராகி விட்டனர். மக்கள் நினைக்கும் ஆட்சியை விஜயகாந்த் கொடுப்பார். இவ்வாறு வாசன் பேசினார்.

  மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசியதாவது: மொத்த வாக்காளர்களில், 29  அகவை வரையுள்ள 1.32 கோடி வாக்காளர்கள் எங்கள் அணிக்குத்தான் வாக்களிக்க உள்ளனர். வெள்ளப் பாதிப்பின் போது துப்புரவுப் பணிகளில் மனிதக் கழிவுகளைக் கைகளில் அள்ளிதொண்டுசெய்தோம். 150 தொகுதிகளில் நாங்கள்  வெல்வோம் என்று இப்போது  பறைசாற்றுகிறேன். விசயகாந்து முதல்வர் ஆவார். கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும். அடுத்தது நமது ஆட்சிதான். மதுக்கடைகளை மூடுவோம். உலகில் பெரிய  உலகஏமாற்று(ஜெகஜால)க்காரர்கள் இருவர். ஒருவர்  செ. மற்றொருவர் கருணாநிதி.  தாசுமாக்குக்கு மது விற்பனை செய்யும் தி.மு.க., ஆதரவாளர்கள்,  செ.,வுக்கு 15 % கழிவு கொடுத்துள்ளனர். அதே போல், தி.மு.க.,வுக்கு  செ. ஆதரவு நிறுவனம் கொடுத்துள்ளது. இருவரும் கூட்டுக்களவாணிகள். ஆனால் வெளியில் எதிர்ப்பது போல் வேடம் போடுகின்றனர்.

  நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஒப்பந்தங்களும்  இணைய இணைப்பில் வெளிப்படையாக நடைபெறும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று விசயகாந்து கோயிலில் சத்தியம் செய்து வந்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க., இரு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும், 2 ஆயிரம் முதல்  வாக்குக்குப் பணம் கொடுத்து வருகின்றனர். பணம் கொடுப்பதைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது. இளைஞர்களை, மாணவர்களைக் கையெடுத்து கேட்கிறேன். பெற்றோரிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்கச் சொல்லுங்கள். பணத்துக்கு  வாக்கு அளிக்க வேண்டா என்று தடுத்து நிறுத்துங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.