மீனாட்சி வெற்றிக்கிண்ணம்01 : winner_kottakalaiani01

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது

கொட்டக்கலை மகளிர் அணி!

  ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன.

 முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 7,500 உரூபாய்ப் பணப் பரிசும் வழங்கப்பட்டன. மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 5,000 உரூபாய்ப் பணப் பரிசும் தரப்பட்டன.

  மேலும், இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதி வெளியிட்ட ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ என்ற நூல் இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் ‘அடையாளம்’ அமைப்பின் செயலாளர் பழனி விசயகுமார் மூலம் நானுஓயா நாவலர் கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. கல்லுரியின் துணைத்தலைவர் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

  மகளிருக்கான மட்டைப்பந்தாட்டப் போட்டியில் தொடராட்டத் தலைவியாக உ.தொ.ம.(g.t.c.) அணியின் வீராங்கனை கீதா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வெற்றிக் கிண்ணமும் 3,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இறுதிப் போட்டியின் தலைவியாக உ.தொ.ம. (g.t.c.) அணியின் வீராங்கனை சுபா தேர்வு செய்யப்பட்டார்.

 இம்முறை போட்டியில் கொட்டக்கலை உ.தொ.ம. (g.t.c.) அணி, கொட்டக்கலை ரி.ரி.சி அணி, நானுஓயா தாச்மகால் அணி, தெசுபோர்டு சிவப்பு உரோசா அணி, கேம்பிரி மேற்பிரிவு கூகுள் அணி, நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி, உயர்மேலை (கிரேட்வெசுடன்) அ, ஆ அணியினர், செம்மொழி மன்றம் அணி, புளியாவத்தை அணி ஆகியன கலந்து கொண்டன. அனைத்து அணிகளுக்கும் நினைவுக் கிண்ணமும் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ நூலும் பரிசாக வழங்கப்பட்டன.

மீனாட்சி வெற்றிக்கிண்ணம்02 ; winner_kottakalaiani02

பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02