‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ : தமிழ்த்தேசியக்கருத்தரங்கு, செருமனி
‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′
யேர்மனியில் தமிழ்த் தேசியக் கருத்தரங்கு
– அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
‘ வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40ஆவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்பு பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் விடுதலைத் தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிலையான தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
வாய்மையின்மீது கட்டியெழுப்பப்பட்ட இலட்சியத்திற்காகத் தமது இன்பங்களைத் துறந்து சாவினைத் தழுவிய மாவீரர்களின் ஈக வரலாற்றின் வெள்ளப்பெருக்காமனது தமிழ் மக்களைத் தலைநிமிர வைத்தது.
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையானது மாவீரர்களின் உயிர்த்தியாகத்தால் உயிர்பெற்றதுடன் மூன்று பத்தாண்டுகள் கடந்தும் அந்த இலட்சியத்தில் பற்றுக் கொண்டு, உறுதி கொண்ட மக்கள் ஆற்றலாகத் தமிழர்களை ஒன்று திரட்டியுள்ளது.
எமது விடுதலையை வென்றெடுக்கும் வகையில் இவ் ஆண்டை வலுவூட்டும் ஆண்டாக நாம் பல வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை, இறைமையுள்ள தமிழீழம் எனும் அடிப்படையில், 40 ஆண்டுகள் பின்னோக்கி மட்டும் அல்லாமல் எமது விடுதலையை வென்றெடுக்க முன்னோக்கிய போராட்டத்தையும் குறிக்கும் வகையில் யேர்மனி நாட்டில்(Bochum, Germany) எதிர்வரும் வைகாசி 01, 2047 /14.05.2016 அன்று வட்டுக்கோட்டை 40ஆவது ஆண்டு நிறைவை ஒட்டிய தமிழ்த் தேசியக் கருத்தரங்கு நடைபெறவிருக்கின்றது. வரலாற்று மிக்க இக் கருத்தரங்கில் தமிழீழ , தமிழக உணர்வாளர்கள் பலர், நேரடியாகவும் இணையவழி ஊடாகவும் கலந்துகொள்ள இருகின்றனர். இம் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது .
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
Leave a Reply