தலைப்பு-வாக்குச்சீட்டு,காகிதமா?ஆயுதமா? :thalaippu_vaakkucheettu_ravikalyanaraaman

வாக்குச் சீட்டு காகிதமா? ஆயுதமா?

நெஞ்சைப் பிழிந்து கண்ணீர் மல்கக்
கெஞ்சிக் கேட்கிறேன்
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்
அடிமையாகி வீழ்ந்தது போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நோக்குங்கள்
எங்கும் உங்கள் குரலொலிக் கட்டும்

தானம் இலஞ்சம் மறுத்து விடுங்கள் – தன்
மானம் காக்க வாக்களியுங்கள்
நேர்மை, துணிவு, பணிவெல்லாம்
தேர்வு செய்து வாக்களியுங்கள்
உங்களுக் காக உழைப்பேன் என்று
வேலை கேட்டு வருகிறார்கள்
வேட்பாளர்களாய் வீதிதோறும்
வாக்கு கேட்டு வருகிறார்கள்
பரப்புரையை நிறுத்தி விட்டுச்
சிக்கல்களைக் கேட்கச் சொல்லுங்கள்
அடக்கமாக வரச் சொல்லுங்கள்
ஆடம்பரத்தைத் தவிர்க்கச் சொல்லுங்கள்
உங்கள் மூன்று கேள்விகளுக்கும்
உடனடியாக விடை கேளுங்கள்
நல்ல ஆளைத் தேர்ந்தெடுத்து
வேலைக் கமர்த்துங்கள்
சின்னம் பார்த்துப் போடாதீர்கள்- நல்
எண்ணம் பார்த்து எடை போடுங்கள்
தலைவன் தலைவி யாரும் இல்லை
நீங்களே இந்நாட்டு மன்னர்கள்
பணத்துக்காக வாக்கை விற்றால்
அதுவும் ஒரு வகை பரத்தமை
நாட்டைக் கெடுக்கும் நயவஞ் சகத்துடன்
நடத்தலாமா வணிகம்
வாக்குச் சீட்டு காகிதமா
மானம் காக்கும் ஆயுதமா
முடிவு உங்கள் கைகளிலே
கைகுவித்து வேண்டுகிறேன் – கொஞ்சம்
சிந்திக்கத்தான் தூண்டுகிறேன்!

இரவி கல்யாணராமன்

இரவி கல்யாணராமன் :ravikalayanaraman