2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு(பால சாகித்திய புரசுகார்) விருது பெற குறும்பாக் கவிஞர் மு.முருகேசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

   புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேசு இப்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

   இவர் 10 புதுக்கவிதை, 9 குறும்பாக்(ஐக்கூ) கவிதை நூல், 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் முதலான 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 குறும்பா(ஐக்கூ)க் கவிதை நூல், 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.

   மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேசு, தமிழில் குறும்பா/ஐக்கூ கவிதைகளை ஓர் இயக்கம் போல் பரவலாகக் கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மு.முருகேசு எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான சிறார் இலக்கிய/பால சாகித்திய புரசுகார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.

   இவ் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேசு கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் புதிய உத்துவேகத்தைத் தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிகளுக்கு அளிக்கிறேன்” என்றார்.

விருதாளர் பேசி : 94443 60421