அமெரிக்காவில் ஆர்கன்சாசு பகுதியில் மண்வாசனைப் பொங்கல்
அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தில் உள்ள பென்டன்வில்,இராசர்சு, பெயெட்வில், உலோவெல் பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு ஆர்கன்சாசு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ‘மண்வாசனை‘ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மண்வாசனை 750 விருந்தினருடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு, வேட்டி சட்டை அணிந்த தன்னார்வலர்கள் விருந்தினரை வரவேற்று, மணக்க மணக்க மதிய உணவு படைத்தனர். இலையில் 16 வகை உணவு, விருந்தினருக்கு அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே பரிமாறப்பட்டது. மன நிறைவாக உணவு உண்ட பின், ‘நம்ம ஊரு சந்தை‘, விருந்தினரை வரவேற்றது. சந்தை நம்மூர் போலவே அழகு செய்யப்பட்டிருந்தது. ஒரு பக்கம் சூரியனை வழிபட்டுப் பொங்கல் படைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ‘மாரியம்மன் கூழ்க் கடை‘, ‘கமல் ஒளிப்பட நிலையம்‘, ‘சிரீ தேவி வளையல் கடை‘, ‘ உச்சமீன்(சூப்பர் ஃச்டார்) தேநீர்க் கடை‘ என அமர்களமாக இருந்தது. தூய உலூயி பகுதியில் இருந்து வந்திருந்த பறையாட்டக் குழுவினர், தாங்கள் ஆடி மகிழ்வித்ததொடு, விருந்தினரையும் ஆட வைத்தனர். கவிதைப் போட்டியில், ‘அந்நிய மண்ணில்‘ உள்ளிட்ட சில தலைப்புகளில் பல கவிஞர்கள் தங்கள் கவித்திறமையை வெளிப்படுத்தினர்.
கலை நிகழ்ச்சிகள் 12.30 மணிக்குத் தொடங்கி, 4.30 மணிக்கு முடிவடைந்தது. கலை நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியரின் ஆட்டம், பெரியவர்களின் ஆட்டம், பாட்டம், ஒரு சிறிய நகைச்சுவை நாடகம் என அனைவரும் சுவைக்கும்படியாக இருந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்களும் மாறுபாடாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து அரட்டை அடிப்பது போல் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘பென்டன் அம்மன் குழு‘, ‘க்ளூ லெசு கூட்டம்‘ ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அமைந்தன. ‘பென்டன் அம்மன் குழு‘வின் நடன நிகழ்ச்சியில், அம்மன் எழுந்து ஆடிய காட்சியைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். மண்வாசனைக் கொண்டாட்டத்தை, இளங்கோ நாராயணசாமி, கீர்த்தி வாசன் பலராமன், உமாசங்கர் பலராமன், பாலா சிவலிங்கம், அருள் இரத்தினசபாபதி, கிசோர் சாத்திரி, குமரேசு திம்மா, சாய்இராசன், கோபால் கிருட்டிணன், மாதவன் சோமசுந்தரம், சரவணன் மாணிக்கம், மணிஇராசா, சற்குணவேல், அருண் கோபிநாத், அருண் சந்தியாகு, கிருட்டிணகுமார் இராமன், சண்முகநாதன் கருப்பையா, மேலும் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலத் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ‘மண்வாசனைக்‘ கொண்டாட்டம் நம்மூர் மண்ணின் வாசனையை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்தது.
– குமரேசு
Leave a Reply