அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

“தொண்டு மனப்பான்மை இருந்தால்

புற்றுநோயையும் எதிர்த்துப்போராடி வாழமுடியும்!’’

    சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் (1988) ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கும் தொண்டு நிறுவனம் அரிக்கேன் வெட்சு என்ற நிறுவனம். இதன் மூன்றாவது ஆண்டு விழா ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை, 27-10-2018 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பல்கலைக்கழகப் பதிவாளர்  தென்சிங்கு ஞானராசு ஆகியோருடன் கவிஞர் அ.வெண்ணிலா, கில்ட் ஆப் சர்வீசு அமைப்பின் இணைச்செயலாளர் மாயா(நாயர்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

   தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, புதுதில்லி  முதலான இடங்களில் கடந்த மூன்றாண்டுகளில் 26 நலப்பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. கடலூரில் வெள்ளத் துயர் துடைப்பு, ஒக்கி புயல் மறுவாழ்வு,  அண்மையில் கேரள வெள்ள மறுவாழ்வுப்பணிகள் ஆகியவையும் இந்தப் பணிகளில் அடங்கும். இன்னும் அதிகமான நலப்பணிகளைச் செய்ய தேவையான நிதிகளைத் திரட்டி வருவதாக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வில் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அ. வெண்ணிலா, “தொண்டு என்பது கையில் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பது மட்டுமல்ல, தங்களைப் பிறருக்காக ஒப்படைத்துக்கொள்வதும் ஆகும். காந்தி, பெரியார், சுபாசு சந்திரபோசு, அன்னை தெரசா போன்றோரின்  தொண்டு மனப்பான்மையை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் தொண்டு மனப்பான்மைதான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கே வழிகாட்டியாக அமைந்தது.” என்றார். அத்துடன், “பல அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்துதரப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் அவை மூடப்பட்டுள்ளன. எனவே பல்வேறு தொண்டுப்பணிகளை மேற்கொள்ளும் அரிக்கேன் வெட்சு அமைப்பினர் அரசுப்பள்ளிகளில் முடிந்த அளவுக்கு நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ளவேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

      “தமிழ் மக்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு சங்கக்காலத்தில் இருந்தே பதிவாகி உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சாத்தனூர் அருகே நிறுவப்பட்ட ஒரு நடுகல்லில் ஒரு வீரனின் உருவமும் அவனுக்கு அருகே ஒரு வேட்டை நாயின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கூடிய கல்வெட்டில் கள்வர்களுடன் மோதி இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு அந்த வீரன் பெயரைக் குறிப்பிடாமல் கோவன் என்று நாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவுக்கு நேசிக்கப்பட்ட விலங்குகளுக்குத் தொண்டு செய்யும் கால்நடைமருத்துவர்களாகிய நீங்கள் நற்பேற்றாளர்கள்” என்றார் வெண்ணிலா.

      நிகழ்ச்சியில அடுத்ததாக வாழ்த்திப் பேசிய மாயா(நாயர்) மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்தும் தன் தொண்டுப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். “இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடக்கத்தில் பாடம் எடுத்தேன். அப்போது நாற்காலியில் அமராமல் அக்குழந்தைகளுக்குச்  சமமாக மனைக்கட்டையில் அமர்ந்து சொல்லித்தந்தேன். இப்போது  நல்வாய்ப்பாக இளம்பிள்ளை வாதப் பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால் கைகால் இழந்தவர்கள், தசை, எலும்பு பலவீனம் கொண்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படித்துவருகின்றனர். அவர்களுக்குத் தொண்டாற்றுவதில் என் முகம் மலர்கிறது. நான் கடந்த பத்து ஆண்டுகளாகப் புற்றுநோயை எதிர்கொண்டு வாழ்ந்துவருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனிப் பயனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால் இதோ உங்கள் முன்பு நலமாக நிற்கிறேன். குழந்தைகளுக்கான தொண்டில் மனம் நிரம்புவதால்தான் புற்றுநோயை எதிர்த்துப் போராடமுடிகிறது” என்றவர் தொடர்ந்து விரிவாக நலப்பணிகளைச் செய்யுமாறு அமைப்பினரைக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் மருத்துவர் ஏ.கே. செந்தில்குமார் வரவேற்புரை வழங்க, இறுதியில் மருத்துவர் நிசா நன்றியுரை வழங்கினார்.

 சிறப்பாகப் பங்காற்றிய உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.