inapadukolai_aavanam01 inapadukolai_aavanam02 inapadukolai_aavanam03

 இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு,   சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது.

  உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை வகிக்க, படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.

 படத்தைத் தலைவர்கள் வெளியிட, மாணவத் தோழர்கள் செம்பியன், சோ.பிரிட்டோ முதலானோர் ஆவணப்படத்தைப் பெற்றுக் கொண்டனர்.

 உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்தியப்பொதுவடைமைக் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் தா.செ. கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் தோழர் க. அதியமான், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் தமிழினி கி. வீரலட்சுமி, தமிழக மக்கள் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முதலான பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

 தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும் போது, “தமிழ்நாட்டு அரசியலோடு இணைக்காமல் வெறும் ஈழம் என்று பேசிக் கொண்டிருந்தால் போதாது. தமிழ்நாட்டில் நாம் காலூன்றி நிற்க தமிழீழத்துக்கு உதவ வேண்டும். இந்தியாவை எதிர் கொள்ளக்கூடிய ஆற்றல் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் இருக்கிறது. எனவே, இதனைப் புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும். இயக்குநர் வ. கவுதமன், கலை இலக்கியத்துறையில் ஒரு விடுதலைப்புலியாகச் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து அவர் இதுபோன்ற படைப்புகளை வழங்க வேண்டும். அவருக்கு எமது வாழ்த்துகள்!” எனத் தெரிவித்தார்.

நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கியத் துறையினரும் கலந்து கொண்டனர்

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தொடர்புக்கு: 7667077075 – 9047162164
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com