‘இளந்தமிழகம்’ மலர்ந்தது!
“தமிழர்களைக் காப்பாற்றுங்கள் இயக்கம்” (Save Tamils Movement) காலத்தின் தேவைக்கேற்பத் தன் பெயரைத் தமிழில் புதியதாகச் சூட்டிக் கொண்டு கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது.
இன்று (ஆனி 29 , 2045 / சூலை 13 / ஞாயிறு) மாலை 6 மணிக்கு சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளியில் இது தொடர்பான விழா நடைபெற்றது.
தோழர்.செய்யது, இவ்வியக்கத்தின் கடந்த ஐந்தாண்டுச் செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கினார். தோழர். சமந்தா தலைமையில் நடந்த முதலாம் அமர்வில் தோழர் இன்குலாப், பேரா.மணிவண்ணன், தோழர்.சுந்தரி ஆகியோர் இவ்வியக்கத்துடனான தங்களது செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, அடுத்த கட்டப் பயணத்திற்குத் தங்களது கருத்துகளை வழங்கினர்.
பெயர் மாற்றம்:
2008-2009 ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது “தமிழர்களைக் காப்பாற்றுங்கள் இயக்கம்”. அன்றைய நிலையில், ” போரை நிறுத்துங்கள்; தமிழர்களைக் காப்பாற்றுங்கள்” (STOP WAR; SAVE TAMILS) என்கிற முழக்கத்தோடு செயல்படத் தொடங்கியதால் இவ்வியக்கத்தின் பெயரே ‘ சேவ் தமிழ்சு’ என்றாகிப் போனது. ஐந்து ஆண்டுகள் கடந்து, ஆறாம் ஆண்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் இயக்கத்தின் பெயர் தமிழில் இல்லாததால் பல தரப்பிடமிருந்தும் தமிழில் பெயர் சூட்டுமாறு தெரிவிக்கப்பட்டது. இதன் உண்மையைப் புரிந்து கொண்டதாலும் இன்றைய சூழலுக்கேற்பவும் இவ்வியக்கத்தார், இயக்கத்தின் பெயரை ” இளந்தமிழகம் ” என்று மாற்றி அறிவிப்பதாகத் தெரிவித்தனர்.
கொள்கை அறிக்கை வெளியீடு:
“21ஆம் நூற்றாண்டில் தமிழகம்” என்ற தலைப்பிட்ட இந்நிகழ்வினூடாக “இளந்தமிழகம்” என்ற புதிய பெயரை அறிவித்து கொள்கை அறிக்கையை வெளியிட்ட பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பேசினார்.
தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றியும், இன்றைய நிலையைப் பற்றியும், எதிர்காலத்தேவை பற்றியும் பேசிய செந்தில், இறுதியாக “இன்று இருப்பது போல் அனைத்து அதிகாரங்களும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக, தமிழக அரசு என்பது தன்னுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தானே தீர்மானிக்கும் முழு அதிகாரம் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அக்கொள்கைகள் சாதி ஒழிப்பையும், மதச்சார்பின்மையையும் சமூக மக்களாட்சியையும் சமத்துவத்தையும் உள்ளிடக்கியதாக இருக்க வேண்டும்” என்பதே எமதியக்கத்தின் கொள்கை என்று விளக்கினார்.
சாதியத்தைப் பற்றி பேசும் பொழுது தமிழ்ச்சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சாதிய கட்டமைப்பை வீழ்த்தப் போராடுவதில்தான் தமிழ்த்தேசியத்தின் உயிரே இருக்கின்றது என்றும், மதவாதத்தைப் பற்றி பேசும் பொழுது மதப் பெரும்பான்மைவாதம், சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பதில் தொடங்கி இறுதியில் குடியாட்சியைக் கொலை செய்வதில் போய் முடிகின்றது, உண்மையான பொருளில் மதச்சார்பற்ற அரசை நோக்கிய பயணமென்பது, சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதிலிருந்து தொடங்க வேண்டும் என்றும், சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தைப் பற்றி பேசும் பொழுது, பெண்களை அணி திரட்டி அமைப்பாக்கும் பணியில் நாம் ஈடுபடாவிட்டால் குடியாட்சிபற்றியோ, தேசியம்பற்றியோ பேசுவதில் பொருளில்லை என்றும் இவற்றை நோக்கிய செயல்பாட்டையே எமதியக்கம் மேற்கொள்ளும் என்றும் தோழர்.பரிமளா பேசினார்.
“ஈழ விடுதலைக்குத் துணை நிற்பது தமிழகத்தின் கடமையும், சனநாயக உரிமையும் ஆகும். இந்திய – இலங்கை இன அழிப்புக் கூட்டை உடைக்கும் பொறுப்பு தமிழக மக்களாகிய நம்மிடமே தங்கியுள்ளது” என்று தோழர். இளங்கோ பேசினார். அவர் மேலும் பேசும் பொழுது “ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன் தீர்வுரிமை உண்டு, அது அந்தத் தேசத்தின் அடிப்படை குடியாட்சி உரிமை, இதனடிப்படையில் எமதியக்கம் என்றுமே ஒடுக்கப்படும் தேசங்களின் பக்கம் நின்று அவர்களது விடுதலைப் போராட்டங்களுக்கு துணை நிற்கும்” என்று பேசினார்.
” ‘வரலாறு எங்களிடமிருந்து தொடங்கவுமில்லை, எங்களோடு முடியவும் போவதில்லை’ என்ற பகத் சிங்கின் கூற்றுக்கேற்ப, இச்சமூக அரசியல் பொருளாதார சூழ்நிலைகளின் வெளிப்பாடாகவே எமதியக்கம் தோன்றியுள்ளது, நடுத்தரப் பிரிவினரை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள எமதியக்கம், இந்நடுத்தரப் பிரிவினரை, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் சமூக நீதி, குடியாட்சி, சமத்துவத்திற்கான போராட்டத்தில் இணைக்கும் வரலாற்றுத்தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு செயல்படும் ” என்று தோழர்.கதிரவன் கூறினார்.
தோழர் சியார்சு தலைமையில் நடந்த இரண்டாம் அமர்வில் தோழர். ஃகாசாகனி, தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி, தோழர் வ.கீதா, தோழர் மீ.த.பாண்டியன் ஆகியோர், “இளந்தமிழகம்” இயக்கத்துடனான தங்களது கடந்த காலச் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து, அடுத்தக் கட்டப் பயணத்திற்கான தங்களது கருத்துகளை வழங்கினர்.
மேடை நாடகம் , பறை இசை , நடனம் , பாடல் ஆகியனவற்றை இளந்தமிழகம் இயக்கத்தின் கலைக்குழு அரங்கேற்றியது
தமிழர்கள் வாழுமிடங்களி லெல்லாம் தன்னுரிமையுடன் வாழவும் தமிழர்களுக்கான இறையாண்மை மிக்க அரசுகள் அமையவும் ‘இளந்தமிழகம்’ பாடுபட வாழ்த்துகள்!
Leave a Reply