இளைஞர்களிடம் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது
இன்றைய இளைஞர்களிடம் இலக்கிய நூல்களைப்
படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது
கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு
அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் இத்திங்கள் (மாசி/மார்ச்சு) தொடக்கத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிகமாய் அக்கறை செலுத்திவரும் இன்றைய இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களைப் படிக்கிற ஆர்வம் வெகுவாய் குறைந்தே காணப்படுகிறது என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.
வேலூர் கவிஞர் பிரதீப்இரவி எழுதிய ‘வீடு திரும்பும் வேளையில்.. ‘ கவிதை நூலை இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் தொழிலதிபர் இரா.சிவக்குமார் வெளியிட, வந்தவாசி சுழற்சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் எம்.எசு.முத்துராசு பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை தலைமையாசிரியர் ஞா.சேவியர், இலயா அறக்கட்டளைச் செயலாளர் மா.யுவராசு, செம்பூர் இலீலாவதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவிற்குத் தலைமையேற்ற கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “பல்லாயிரமாண்டுகால சிறப்பையும் பெருமையையும் உடையது நமது தமிழிலக்கியம். ஆனால், அவற்றின் பெருமையை, சிறப்பை நாம் இன்னும் உணராதவர்களாய் இருக்கிறோம். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ய்ய)ர் தமிழகம் முழுக்கத் தேடித்தேடி சிதைந்துகிடந்த பல பழந்தமிழ் இலக்கிய நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரித்து நூல்களாக்கி தந்தார். ஆனால், அவற்றை நாம் முறையாக படிக்காமலும் பாதுகாக்காமலும் இருக்கிறோம். தமிழரின் அடையாளமாகவும் முகமாகவும் இருப்பவை பழந்தமிழ் இலக்கியங்களே. நாம் எந்த துறையில் படித்தாலும், உலகின் எந்த நாட்டில் பணி செய்தாலும் தமிழ் மொழியின் சிறப்பறிந்து அவற்றைப் பரப்பிட வேண்டும். நம் குழந்தைகளுக்கும் தமிழ் சொல்லித்தர வேண்டும். யுனெசுகோ இன்னும் நூறாண்டுகளில் அழிய இருக்கிற மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கிறது என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.. இதை மனத்தில் கொண்டு நாம் வீடுகளில், பணியிடங்களில் தமிழில் பேசுவதை நடைமுறைப் படுத்தினால் தமிழ்மொழி என்றைக்கும் அழியாமல் வாழும்” என்று குறிப்பிட்டார்.
நூலாசிரியர் கவிஞர் பிரதீப்இரவி ஏற்புரையாற்றினார். நிறைவாக, எசு.மகேசுவரி நன்றி கூறினார்.
படக் குறிப்பு
——————–
இரா.சிவக்குமார் வெளியிட, எம்.எசு.முத்துராசு பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். நடுவில், நூலாசிரியர் கவிஞர் பிரதீப்இரவி, (இடமிருந்து ) ஞா.சேவியர், கவிஞர் மு.முருகேசு, யுவராசு ஆகியோர் உள்ளனர்.
தரவு : முதுவை இதாயத்து
Leave a Reply