கணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு
கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மாநாடு 2014 மார்ச்சு 30 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணிவரை சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நடைபெற்றது.
தொடக்கவிழாவில்,பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, . மாநாட்டின் மையக் கருத்தை விளக்கினார். தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி-செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கிக் கூறினார். தமிழில் பேச்சு – எழுத்துமாற்றி, எழுத்து-பேச்சுமாற்றி, இயந்திரமொழிபெயர்ப்பு போன்ற கணியன்கள் உருவாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆய்வாளர்களுக்கு அதற்குத் தேவையான உதவிகளைத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் என்று உறுதியளித்தார்.
தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத்துறைச் செயலர் முனைவர் தா.கி. இராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலைநாடுகளில் வளர்ச்சிபெற்றுள்ள மொழித்தொழில்நுட்பம் தமிழுக்கு முழு அளவில் கிடைக்கவேண்டியதன் இன்றியமையா மையை வலியுறுத்தினார். தமிழ் ஆய்வாளர்கள், மொழியியல் ஆய்வாளர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள் இணைந்து, கணினித்தமிழ் வளர்ச்சியை அடுத்த உயர்கட்டத்திற்கு இட்டுச் செல்லவேண்டும் என்று கூறினார்.
தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர், நடுவண் மொழியியல் நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் இல. இராமமூர்த்தி, சிங்கப்பூர் தமிழ் ஆய்வாளர் திருமிகு இராசேசுவரன் பூபாலன், மலேசியா கணித்தமிழ்த்தொண்டர் திருமிகு இளந்தமிழ் , உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் பசும்பொன், செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் இயக்ககப் பொறுப்பு அலுவலர் திருமிகு மா. பூங்குன்றன், ஆகியோர் தமிழ் மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தி உரையாற்றினார்கள். மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. மகாலிங்கம் நன்றியுரையாற்றினார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு, பிற்பகல் 2 மணிக்கு மாநாட்டு அமர்வு தொடங்கியது. முனைவர் இராம. கிருட்டிணன் (இராமகி) அவர்கள் தலைமை வகித்தார். பேரா.இல. இராமமூர்த்தி (மைசூர்) , பேரா. ம. கணேசன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பொறிஞர் நாக. இளங்கோவன் (தமிழ் அறிவியல் அறிஞர்) , பேரா. நடராசபிள்ளை (மைசூர்), பேரா. சாம் மோகன்லால் (மைசூர்) , முனைவர் செல்வி காமாட்சி (மாநிலக் கல்லூரி) , முனைவர் உமாராசு (மதுரைப் பல்கலைக்கழகம்), முனைவர் தனலட்சுமி ( எசு. ஆர் எம் பல்கலைக்கழகம்), பேரா. வி.நாகராசன் (சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் அருள்மொழி (ஐதாராபாத் பல்கலைக்கழகம்) , திருமிகு தெ.சு. மணி ( ஊடகவியலாளர்) , முனைவர் அண்ணாகண்ணன், ஆய்வாளர் பிரிசில்லா, முனைவர் மணிகண்டன் ஆகியோர் தமிழ்மொழித்தொழில்நுட்பம், கணினிமொழியியல், தமிழ்த்தரவுதளம், தமிழ்கணியன்கள் ள் ஆகியவைபற்றிப் பல்வேறு கருத்துகளை முன்வைத்து உரையாடினர்.
மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற நிறைவுவிழா, பேரா.இல. இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் சிறப்புரையாற்றினார். மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர் முகம்மது இப்ராகிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் இராமகி அவர்கள் மாநாட்டு அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்து வழங்கினார். பின்னர் கீழ்வரும் மூன்று தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன:
1. கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்மொழித்தொழில்நுட்ப மையம் ஒன்று தமிழகத்தில் தமிழக அரசால் நிறுவப்படவேண்டும். நடுவண் அரசின் நிதிநல்கையும் அதற்குப் பெறவேண்டும்.
2. மேற்குறிப்பிட்ட தமிழ்மொழித்தொழில்நுட்ப மையமானது தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வுநிறுவனங்களில் இயங்கும் தமிழ்மொழித்துறைகள், மொழியியல் துறைகள், கணினியியல் துறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
3. மின்-வணிகம், மின்-ஆளுமை, மின்-கல்வி, மின்-நூலகம் போன்ற பல துறைகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். கணினித்தமிழின் பயன்பாட்டு எல்லை விரிவாக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையும் தகவல்தொழில்நுட்பத்துறையும் இணைந்து, வகுத்துச் செயலாற்றவேண்டும்,
இறுதியாக, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிப் பதிப்பாசிரியர் முனைவர் மு. கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Leave a Reply