canada_blackjuly01

கடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள்.

இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமன்றத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பன்னாட்டு இனப்படுகொலை அறிஞர்கள் சங்கத்தின் (International Association of Genocide Scholars) தலைவரும் பேராசிரியருமான தானியல் ஃபெரென்சுடீன் (Danial Ferenstein) சிறப்புரை ஆற்றினார். அவரது நம்பிக்கையூட்டும் உரையை கேட்பதற்கு என மக்கள் ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.

ஈழ மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை‌யே என்பதை வலியுறுத்தி பேசினார். உலகெங்கிலும் இனப்படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் எங்குமே நடைபெறாத கொடிய இனப்படுகொலை வடிவம் தமிழீழத்தில் நடைபெற்றது என்றார்.

“உலகெங்கும் இனப்படுகொலைகள் இனப்படுகொலையின் சில கூறுகளை கொண்டிருந்தாலும் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை ஒன்றே இனப்படுகொலையின் அத்தனை கூறுகளையும் தாங்கி நிற்கின்றது” என்றார். “எமக்கான குரலாக ஒலிக்க மாந்த நேயம் உள்ள பல மேனாட்டாளர்கள் இன்று ஆயத்தமாக உள்ள நிலையில் தமிழர்கள் நாம் எம் மக்களுக்கான எம் குரலை ஓங்கி ஒலிப்போமாக.

வீழ்வது தோல்வி அல்ல. மீண்டும் எழாதிருப்பதே தோல்வி.”

தரவு: இரமணன் & எங்கள் ஈழம் இது தமிழீழம்