கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை
கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில்
வினைதீர்த்தான் தலைமையுரை
கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு “வங்கத்தின் கங்கை” இலக்கிய கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த ஐப்பசி 19, 2046 / 01.11.2015 ஆம் நாள் கூட்டத்திற்குத் தலைமைதாங்கும் வாய்ப்பு சங்கத்தின் 75 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் செயலர் திருமிகு சித்ரா இராமகிருட்டிணன், துணைத்தலைவர் திரு நக்கீரர் அன்பால் சொ.வினைதீர்த்தானுக்கு அமைந்தது.
அவர் தம்முடைய உரையில் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டு” அங்கு வந்திருந்த சுவைஞர்கள், பங்காளர்களை வரவேற்றார்; இளம் மாணவர்களுக்குப் பாரதியார் பாடல் ஒப்பித்தல், திருக்குறள் ஒப்பித்தல் போன்ற போட்டிகள் மூலமும் பெரியவர்களுக்குப் பாட்டுப்போட்டி, உரைகள் மூலமும் தமிழமுதின் சுவையினை ஊட்டுகிற சங்க நிர்வாகிகளைப் போற்றினார்; பின் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-.
“ ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ என்றார் பாரதிதாசன். ஏன்? ”வான்நின்று உலகம் வழங்கி வருதலால்” மழை அமிழ்தென்கிறார் வள்ளுவர். துணைவியைப் பொருந்தும்போதெல்லாம் உயிர்தளிர்ப்பதால் அவள் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்கின்றன என்று “உறுதொறு உயிர் தளிர்ப்பத் தீணடலால் அமிழ்து” என்றுமுரைத்தார். தமிழைப்படித்தால் உயிர், உணர்வு எல்லாம் தளிர்க்கும். வாழ்வின் பயன் இனிக்கும். நிலைக்கும்! எனவே தான் தமிழுக்கு அமுதென்று பெயர்.
“நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று
பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று
பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று
சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கந் தானே”
என்கிறது விவேக சிந்தாமணி.
இன்றைக்கு “வாடிக்கையாளாரை முதலாளி” என்கிறார்கள். வாடிக்கையாளருக்கு உகந்தவராக இருந்தால் வணிகருக்குச் சொர்க்கம்தான். துணைவி பொருத்தமாக அமைந்தால் அதுவும் சொர்க்கமே. இல்லாவிடில் கூறாமல் துறவு மேற் கொள்ளவேண்டியதுதான்! இவை இரண்டும் எல்லோருக்கும் அமையுமென்று சொல்லமுடியாது. ஆனால் நாம் எல்லோரும் ஏற்படுத்திக்கொள்ளமுடிகிற சொர்க்கம் ”பற்பலரோடு நன்னூல் பகிர்தலாகும்”. பாரதி தமிழ்ச்சங்கம் ஆர்வலர்கள் தங்கள் கவிதைகள், நல்லுரைகள், பாடல் திறன்களைப் பகிர்ந்துகொள்ள மாதக்கூட்டம் மூலம் மேடை அமைத்துத்தருகிறது. இவ்வாய்ப்பைச் சுவைஞர்களுக்கு வழங்கிகிற சங்கத்தை மனதாரப் போற் றுகிறேன்.”
திரு நக்கீரர், சங்கத்தின் முதல் பெண் செயலர் திருமிகு சித்ராவை வாழ்த்தினார். கூடியிருந்து கேட்டல் இனிதென்றார். திருமிகு இலதா தான் எழுதிவந்த நடைமுறையை எதிரொலிக்கும் “பாலைவன இராசாக்கள்’ கதையை வாசித்தளித்தார். திரு அன்பரசு, திரு கிருட்டிணமூர்த்தி, திரு இராமச்சந்திரன் உரையாற்றினர். திருமிகு சித்ரா மனம் நெகிழ்ந்த நன்றியுரை வழங்கக் கூட்டம் இனிது நிறைவுற்றது.
படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.
என்னுடைய பதிவில் அயற்சொற்களை நீக்கித் தகுந்த மாற்றுச்சொற்களயிட்டு அருமையாக வெளியிட்டுள்ளமைக்கு மிக்க நன்றி.. அயராத தங்கள் உழைப்பைப்பொற்றுகிறேன்.
வாழ்த்துக்கள்.