கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு. இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர். இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார்.
இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழில் சிறப்பான முறையில் இலக்கியப் பணிகளைச் செய்துவரும் இளைய தலைமுறை படைப்பாளர்களுக்கு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருதுகள் வழங்கப்பட்டன.
வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசின் தொடர்ச்சியான இலக்கியச் செயல்பாடுகளைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருதினை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
அதேபோல், சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிஓவியா’ பல்சுவை இதழ் நடத்திய சிறந்த கவிதை நூலுக்கான போட்டியில் மு.முருகேசு எழுதிய ‘ வரும்போல் இருக்கிறது மழை ‘ சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான பரிசளிப்பு விழா சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நீதியரசர் அ.வள்ளிநாயகம் தலைமையேற்றார். திரைப்பட இயக்குநர் எசு.பி.முத்துராமன் பாராட்டுச் சான்றிதழையும் பரிசினையும் வழங்கினார்.
கவிஞர் மு.முருகசு வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு, கல்விப் பணிகளையும் குமுகாயப் பணிகளையும் செய்து வருகிறார்.இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, திறனாய்வு நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
இவரது படைப்புகளை இதுவரை 3 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு விருதுகள் வாங்கிய கவிஞருக்குப் பாராட்டுகள். தமிழால் புகழ் பெறும் இவர், தம்பெயரைத் தமிழ் எழுத்துகளில் குறிப்பிட வேண்டுகின்றோம்.
படக்குறிப்பு:
1. கவிஞர் மு.முருகேசுக்கு சிறந்த இலக்கியச் செயல்பாடுகளுக்கான விருதினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்குகிறார். அருகில், புதுச்சேரி கவிஞர் பூங்கொடி பராங்குசம் உள்ளார்.
2. கவிஓவியா’ இதழ் நடத்திய சிறந்த நூலுக்கான பரிசளிப்பு விழாவில், கவிஞர் மு.முருகேசுக்கு திரைப்பட இயக்குநர் எசு.பி.முத்துராமன் பரிசினையும் பாராட்டு விருதினையும் வழங்குகிறார். அருகில், கவிஞர் கார்முகிலோன், கவிஓவியா இதழாசிரியர் மயிலாடுதுறை இளையபாரதி ஆகியோர் உள்ளனர்.
– தகவல்: முதுவை இதயத்து
கவிஞர் மு முருகேசவர்கள் சிறந்த இலக்கியவாதியென்பதோடு சிறந்த பேச்சாளருங்கூட!
வந்தவாசியில் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து ‘திண்ணை’ என்னும் இலக்கியக்கூட்டத்தை மாதந்தோறும்நடத்திவந்தார். அதில் பல இலக்கியவாதிகளை அழைத்துவந்து உரையாற்றச்செய்வார்.
பலகூட்டங்கள் ஒரு பள்ளிவலாகத்திலேநடைபெற்றாலும் அவ்வப்போது சிறப்புவிருந்தினர்வருகைக்காக மண்டபத்தையேற்பாடுசெய்வதுமுண்டு.
கவிஞர் ‘ஆரிசன்’ என்பாருடைய கவிதைநூலை கவிக்கோ அப்துல்ரகுமானவர்கள்வந்துவெளியிட்டார். அதற்கும் பல திண்ணைகளுக்கும் 2003 – 2008 காலங்களில் நான் வந்தவாசியிலிருந்தபோது கலந்துகொண்டிருக்கிறேன்.
கவிஞர் முருகேசவர்கள் விருதுபெற்றமைகுறித்து மகிழ்கிறேன்.
அவர்தம் இலக்கியப்பணி வளர்க! அவர்தம் புகழ் ஓங்குக!