கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக்
குழந்தை இலக்கியப் பரிசு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 / செட்டம்பர் 25) தேனியில் நடைபெற்றது; தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் தலைமையேற்றார். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீச்சண்யா, மாவட்டச் செயலாளர் ஐ.தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி மாவட்டத் தலைவரும் எழுத்தாளருமான தேனி சீருடையான் அனைவரையும் வரவேற்றார்.
2015-ஆம் ஆண்டு வெளியான சிறந்த குழந்தை இலக்கிய நூலாக கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி (இ)ராசாவும்’ எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டுக் கேடயமும் உரூ.ஐந்தாயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.
தமுஎகச மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன், பொருளாளர் சு.இராமச்சந்திரன் ஆகியோர் பரிசினை வழங்கினர்.
நூலைத் திறனாய்வு செய்து வழக்கறிஞரும் எழுத்தாளருமான மு.ஆனந்தன் உரையாற்றினார்.
தேனி கிளைச் செயலாளர் இதயநிலவன் நன்றி கூறினார்.
-வந்தை அன்பன்
Leave a Reply