சமூக ஞானத்தைப் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை!
மனிதன் மன்பதை அறிவைப் பெறுவதற்கு
புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன
– வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு –
வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், மன்பதை அறிவைபயும் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.
கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் இரா.சிவக்குமார், தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி இணைப் பேராசிரியர் இரசினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், தேசூர் கவிஞர் பால.வெங்கடேசு எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்சு’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத்து வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டார்.
விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகசு ’புத்தக வாசிப்பும் சமூக ஞானமும், எனும் தலைப்பில் பேசியதாவது: ” கல்வியறிவு மட்டுமே ஒரு மனிதனுக்கான உலக அறிவைத் தந்துவிடாது. கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆவான் என்பார்கள். உலகில் புதிய சிந்தனைகளை விதைத்த தலைவர்கள் பலரும், தங்களை மாற்றியவை புத்தகங்களே என்றுதான் கூறியிருக்கிறார்கள். இன்றைக்குப் புத்தகங்கள் அதிகம் வெளியாகின்றன. ஆனால், புத்தகம் வாசிக்கிற பழக்கம் வெகுவாய் குறைந்து வருகிறது. வீட்டில் புத்தகம் படிக்கிற நேரத்தைக் காட்சி ஊடகங்கள் குறைத்துவிட்டன. ஒரு மனிதன் சமூக அக்கறையுடையவனாக வளர்வதற்கும், சமூக ஞானத்தைப் பெறுவதற்கும் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன” என்றார்.
விழாவில், உரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் சீவிதன் சேசுராசா, கொரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சி..செல்லக்குட்டி, கரூர் வைசியா வங்கி ஊழியர் பி.அசுவின் ஆகியோரைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
நிறைவாக, மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.
தரவு : முதுவை இதாயத்து
Leave a Reply