சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நினைவு விழா
“சிலம்புச் செல்வர்” தாமரைத்திரு
முனைவர் ம.பொ.சிவஞானம் அவர்களின்
20-ஆம் ஆண்டு நினைவு விழா
மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா!
தமிழகத்தின் எல்லைகளை மீட்டுத் தந்தவர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் நலனிற்காகப் பாடுபட்டவர், அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியவர், அரசியல், மொழி, இலக்கியம் ஆகியவற்றில் 120-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மா.பொ.சி. அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் புரட்டாசி 16, 204 / 03-10-2015 அன்று சென்னை-மயிலாப்பூர், நகர் மேம்பாட்டுக் கட்டளை(சி.ஐ.டி.) நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் 20-ஆம் ஆண்டு நினைவு விழாவும் மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழாவும் நடைபெற்றன.
விழாக்களின் ஒரு பகுதியாக ‘சிலப்பதிகார விழா கருத்தரங்கம்’ நடைபெற்றது. சிலப்பதிகாரத்திலும், மா.பொ.சி எழுதிய சிலப்பதிகார நூல்களிலும் கூறப்பட்டுள்ள பல்வேறு சிறப்புகளையும் கண்ணகி, மாதவி, மணிமேகலை, ஆகியோர்களின் சிறப்பியல்புகளையும, சிலப்பதிகாரதினூடே சொல்லப்பட்ட வாழ்வியல் நீதிகளையும், நெறிமுறைகளையும், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.
முன்னதாக, திருவாட்டி மா.பொ.சி. மாதவி பாசுகரன், கருத்தரங்க வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ் விழாவில் ‘கப்பலோட்டிய தமிழன்.காம்’ என்ற இணைய வலைத்தளத்தைப், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர், திரு. ஏ.சி.சண்முகம்,தொடக்கி வைத்தார்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருட்டிணன் கலந்துகொண்டார். எழுத்தாளர், கலைமாமணி, திரு. பாலகுமாரன் முனைவர் எசு.கிருட்டிணசாமி, முனைவர் திருவாட்டி மோகனா கிருட்டிணசாமி அகியோர்களுக்கு மா.பொ.சி. விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
பின்னர் மறைந்த மா.பொ.சி. அவர்களின் பேரன் திரு. செந்தில் மா.பொ.சி. நன்றியுரையாற்றினார்.
விழா நடத்தியவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நிறைவளித்தாலும் செய்தியாளர்களுக்கு மனக்குறைவை ஏற்படுத்தியது. செய்திக்கான மேல் விவரங்களைக்கேட்ட பொழுது விழாக்குழுவினர் விரட்டி அடிப்பதுபோல் பேசினர். செய்தியாளர்களை அழைத்தே இருக்க வேண்டாமே!
– செய்தியாளர் இராசன் தனசேகர்
+91-99628 28939
Leave a Reply