சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் பிறந்தநாள் விழா – இளங்கோ விருது வழங்கல்
புரட்டாசி 5, 2045 / 21.09.2014 : தமிழறிஞர் சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் அகவை நிறைவை யொட்டிச், “சிலப்பதிகாரப் பெரு விழா’’ எனும் விழா சென்னை ஏ.வி.எம். இராசேசுவரி அரங்கில் நடைபெற்றது.
காலையில், பிறந்த நாளை முன்னிட்டுச் சிலப்பதிகார அறக்கட்டளையை, தி.மு.க. பொதுச்செயலர் பேராசிரியர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, “இளங்கோ விருதினை’’ நீதியரசர் அரு.இலக்குமணன் அவர்கள் வழங்கினார். விருதுடன் ‘பூம்புகார் சிற்பி’ என்ற பட்டமும், ஓர் இலட்ச உரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டன.
மாலை, சிலம்பொலிச் செல்லப்பனின், 85 ஆவது பிறந்த நாள் விழா நடந்தது; ‘சிலம்பொலி 85’ வாழ்த்து மலரை, முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன் வெளியிட்டார். திருநங்கை நடராசனின் சிலப்பதிகார நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
கலைஞர் கருணாநிதி ஏற்புரையில் கூறியதாவது: “நான்கைந்து நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், இவ்விழாவிற்கு வர முடியாதோ என, நினைத்தேன். சிலம்பொலிச் செல்லப்பன், என்னோடு பல்லாண்டுக் காலம் பழகிய நண்பர். அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை; வந்து விட்டேன். சிலம்பொலிச்செல்லப்பன், சிலப்பதிகார அறக்கட்டளை தொடங்கியது பாராட்டி மகிழத்தக்க ஒன்றாகும். சிலம்பொலிச்செல்லப்பனின் பணிக்கு, எல்லாரும் உதவிட வேண்டும்.”
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஏ.ஆர்.இலட்சுமணன் பேசும் போது, ”தமிழில் முதல் காப்பியம், சிலப்பதிகாரம். பெருமை வாய்ந்த, சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பிடப் பாடுபடும், சிலம்பொலிச் செல்லப்பனை, மனதாரப் பாராட்டுகிறேன்,” என்றார்.
விழாவில், முனைவர் வா.செ.குழந்தைசாமி, பேராசிரியர் செல்லப்பன், முனைவர் சாரதாநம்பி ஆரூரன், கவிஞர் வைரமுத்து ஆகியோர், சிலம்பொலிச் செல்லப்பனின் இலக்கியப் பணியைப் பாராட்டி பேசினர்.
விழாவில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் எழுதிய “அணிந்துரைச் செம்மல் சிலம்பொலியார்” நூல் வெளியிடப்பெற்றது.
முன்னதாக, வரவேற்புரையில், சிலம்பொலிச் செல்லப்பன், ”சிலப்பதிகாரத்திற்கு தொண்டாற்றும் கவிஞருக்கு, சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும், ஓர் இலட்சம் உரூபாய் நிதி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் சிலப்பதிகாரத்தை பரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.
Leave a Reply