நிகழ்-வந்தவாசி-தாய்மொழிநாள்01 - nighazh_vandavasi_thaaymozhinaal03

உழைக்கும் மக்களின் நாவில் இருக்கும்
   தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது.
   – உலகத் தாய்மொழி நாள் விழாவில் கவிஞர் முருகேசு உரை

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாசி 08, 2047 /  பிப்.20, 2016  அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில், “உழைக்கும் மக்களின் நாவில் உயிர்த்திருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு உரையாற்றினார்.

இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். கலை ஆசிரியர் பெ.பார்த்திபன், மூன்றாம் நிலை நூலகர் ச.சோதி, நூலக உதவியாளர் மு. இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர் வைசியா வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் ப.சுந்தரமூர்த்தி ‘வங்கிப் பணியில் எனது  பட்டறிவுகள்’ எனும் தலைப்பிலும், ‘ழ’ தொலைக்காட்சியின் இயக்குநர் வெ.அரிகிருட்டிணன் ‘ஊடகங்களும் தமிழும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.

விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு ‘ ‘தாய்மொழியைக் கண்ணெனக் காப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றும்போது, “ஒரு மொழி என்பது அந்த இனத்தின் அடையாளமாகும். மொழியை இழப்பது நம் விழியை இழப்பது போன்றதாகும். ஐக்கிய நாடுகள்  அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான  யுனெசுகோ அமைப்பு உலகிலுள்ள மொழிகளில் சில மொழிகள் அழிந்துவரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக  அண்மையில் கூறியுள்ளது.  அப்பட்டியலில் தமிழ் இல்லாவிடினும், எந்த ஒரு மொழியும் மக்களின் பேச்சுமொழியாக இல்லாத சூழலில் நிச்சயம் அது பயன்பாட்டிலிருந்து அழிந்துவிடும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும்.

“ஒவ்வொரு நாட்டிலும் கல்வி, மருத்துவம், சட்டம் போன்றவை  அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டும். தாய்மொழியில் இல்லாமல் பிற மொழியில் பெறப்படும் எதுவும் முழுமையான அறிவாக இருக்க முடியாது. முதலில் ஒருவன் தனது தாய்மொழியைப் பிழையின்றிக் கற்று விட்டால், ஏனைய மொழிகளைக் கற்றுக் கொள்வது மிக எளிதான ஒன்று. பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிச் சொற்களை நாம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

“தாய்மொழி பேசும் நாடுகளான சுவிட்சர்லாந்து,  செருமனி, சப்பான், அமெரிக்கா, பிரான்சு, கனடா, இத்தாலி, ஆத்திரேலியா ஆகியவை கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றன. அதேபோல், காங்கோ, புருண்டி, மடகாசுகர், நைசீரியா,  உகாண்டா ஆகிய தாய்மொழியில் பேசாத நாடுகள் இன்றைக்கு வளர்ச்சியற்று வறுமையில் மிகவும் பின்தங்கியுள்ளன என்கிற உண்மை  அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உழைக்கும் பாட்டாளி மக்களின் நாவில் பேச்சு மொழியாக இருக்கும்வரை நம் தாய்மொழியாம் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று பேசினார்.

நிறைவாக, மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம்  நன்றி கூறினார்.

[ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]