KumariNesamani01

தமிழர்களின் குமுகாய, பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியைத்  தாய்த்தமிழகத்துடன்  நிலைத்து வைத்துக் கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தி  ஈகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர்  தலைவர்(மார்சல்) நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

cm-nesamony-big01
இப்பெருந்தகையாளரின் நினைவைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 48இலட்சத்து 70 ஆயிரம் உரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைவர் நேசமணி மணிமண்டபத்தினை, முதலமைச்சர் செல்வி செயலலிதா காணொலிக் காட்சி மூலமாக  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்து வைத்தார்.

நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிகள் வகித்து மக்களுக்குத் தொண்டாற்றியவர் தலைவர் நேசமணி ஆவார்.  இவரின்  அரும்பணியை நினைவு கூர்ந்து பெருமைப் படுத்தும் வகையில்  நாகர்கோவிலில் அமைந்துள்ள  நேசமணியின் திருவுருவச்சிலைக்கு – கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான – நவம்பர் 1-ஆம்  நாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து  மதிப்புடன் வணங்கி அரசு விழாவாகக் கொண்டாட முதலமைச்சர் செல்வி செயலலிதா ஆணையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. பச்சைமால், செய்தி-சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு இராசேந்திரபாலாசி, தலைமைச் செயலர் திருமதி சீலா பாலகிருட்டிணன், தமிழ் வளர்ச்சி-செய்தித் துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு செ. குமரகுருபரன்,  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.