ஆனி 6, 2045 /சூன் 20, 2014 அன்று கனடா மண்ணில் வெளிவரும் வண்ண அட்டை இதழான “தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

பெரும் திரளான மக்கள் குழுமிய ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்த இந்த நிகழ்வுக்கு இங்குள்ள தனியார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பிறர் போலன்றி அழகு தமிழ்ப் பெயராக “தமிழ் மழை” எனப் பெயர் வைத்தமைக்கும் நிகழ்வை முற்று முழுதாக தமிழ் மணம் கமழும் வண்ணம் சிறப்புற வடிவமைத்தமைக்கும் இதழாசிரியர் சிவாவுக்கும் நிருவாக ஆசிரியர் மோகனுக்கும் பாராட்டுகள்.

தென்னிந்தியத் திரை உலக நட்சத்திரங்களை இறக்குமதி செய்து கொச்சைத் தமிழும் ஆங்கிலமயமுமாக இங்குள்ள தமிழர்களையும் குத்தாட்டம் ஆடவைக்கும் வழமையான கூத்துகள் பலவற்றின் ஆட்டங்களுக்குள் அழகான தமிழ் மழையாய் இந்த நிகழ்வு இருந்தது.

”தமிழர்கள் நாம் ஒரு குடும்ப மக்கள்” என நாம் ‘எழுதினாலும் உணர்வுள்ளோர் உயிரில் ஏற்று போற்றினாலும் தமிழகத் தமிழர்கள் வேறாகவும் ஈழத்துத் தமிழர்கள் வேறாகவும் இன்னமும் இந்திய மரபுவழித் தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் ஈழத்துத் தமிழர்கள் வேறாகவுமே நிகழ்வுகளில் பங்கேற்கும் ஒரு வகை இடைவெளி இருப்பதுண்டு.

நேற்றைய நிகழ்வில் அந்த இடைவெளியைத் தகர்த்து இருக்கின்றது “தூறல்”. தமிழக, ஈழ என அனைத்துத் தமிழர்களும் தமிழ் மழையில் நனைய வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சி மேள வாத்திய இசை நிகழ்ச்சியோடு தொடங்கி, தமிழ்த் தாய்ப் பாடல் கனடா நாட்டுப்பண் எனத் தொடர்ந்தது.

நிகழ்ச்சியில் மூன்றே மூன்று நடனங்கள் என்றாலும் அற்புதமான நடனங்களாக அவை அமைந்திருந்தன. செல்வி நிவேதா இராமலிங்கம் அவர்களின் மாணவிகளோடு ஆசிரியையுமாக இணைந்து மிகச் சிறப்பாக நாட்டியத்தை வழங்கி இருந்தார்கள். (இந்த நடனங்களில் என் மகளும் பங்கேற்றமை பெருமையே)

வழமையான மலர்வணக்கம் என வரும் வேற்று மொழி வரவேற்பு நடனம் போல் அல்லாமல் ‘செம்மொழியாம் எம் தமிழ் மொழி’ பாடலுக்கு நடனமாடியமைக்கு நிவேதாவுக்கும் மாணவிகளுக்கும் பாராட்டுநேற்றைய நிகழ்வில் அந்த இடைவெளியை தகர்த்து இருக்கின்றது “தூறல்” தமிழக, ஈழ என அனைத்து தமிழர்களும் தமிழ் மழையில் நனைய வந்திருந்தார்கள்.

இவர்கள் வழங்கிய “செம்மொழியாம் எம் தமிழ் மொழியாம்” பாடலுக்கான நடனம் மெய் சிலிர்க்க வைத்தது.

“தமிழ் மழை” என்ற பெயருக்கு ஏற்றாற்போல் தமிழ் மழை பொழிந்த இனிய பாடல்கள்பலவற்றை இனிய இன்னிசைக் குழுவின் பின்னணி இசையோடு அதி அற்புதமாக வழங்கியபாடகர்கள், வாத்திய இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

விழாவின் நாயகராக, கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழகத்தில் இருந்துசிறப்பு விருந்தினராக வந்திருந்தமை தனிச் சிறப்பாக இருந்தது.

.

கவிஞர் வைரமுத்து அவர்கள் தன் அழகு தமிழ் உரையில் பலவற்றைப் பேசினார். அவையினர் அமைதியாக இருந்து கேட்டனர். அவர் அந்த அமைதியை “உங்கள் மௌனத்துக்கு நன்றி “என வடமொழி சொல்லெடுத்துப் பாராட்டிய போது எனக்குள் சற்றே அமைதி குலைந்தது.அப்பேர்பட்ட தமிழ் ஆளுமை கொண்ட கவிஞர் வாயில் பல வடமொழிசொற்கள்…”இங்கிதம், சம்பவம், கலாச்சாரம், சிரமம், பிரச்சனை, தார்மீகம், பார்பர்…”

இங்கு ஒரு நிகழ்வு செய்வதன் கடினம் அறிவேன். அதிலும் அதை தமிழ் மணம் கமழச் செய்வது என்றால்… அது ஒரு பெரும்அறைகூவல்.

அரைகுறை ஆடை அணிந்து ஆடுவதற்காக நடிகைகளை இறக்குமதி செய்யும் இங்குள்ள பலதனியார் நிகழ்வுஏற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தமிழ் பாடும் கவிஞனை அவன்தமிழின்பம் சுவைக்க அழைத்த முயற்சியைப் பாராட்டுகின்றேன்.

கவிஞர்வைரமுத்து அவர்கள் தன்னுரையில் பல்வேறு செய்திகளைப் பேசினார். “நம்பிக்கை, வெற்றி, காதல், வாழ்க்கை, மரணம், இனம், மொழி, தமிழர், பேசும் விதம், கணவன்மனைவி உறவு, வாசிப்பு, தமிழ்ப் பண்பாடு, மொழியை அடுத்த சந்ததி கற்பிக்கவலியுறுத்தியமை, உலக இலக்கியங்கள், தமிழின் சுவை, சிலேடை மொழி, தவறானபழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல், தொழில்நுட்பம், நகைச்சுவை, உணர்வுகள், திருக்குறள் என நிறையவே பேசினார்.. காத்துக் கிடந்தேன்.. எம் தமிழீழம்பற்றி ஏதேனும் சொல்வாரா? எம் விடுதலைப் போராட்டம் பற்றி ஏதேனும் சொல்வாரா? விடுதலை போராளிகள் பற்றி ஏதும் சொல்வாரா? சொல்லவே இல்லை.

பேசியவற்றில் கிடைத்த சில முத்துகள்:
“துன்பங்கள் இல்லாமல் வெற்றி உண்டா?”

“அனைத்தும் இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்”
“நீங்கள் தேசத்தை இழந்திருக்கலாம். ஆனால் உங்களை இழக்கவில்லை”
“சாவதற்கு ஆயிரம் வழி உண்டென்றால் வாழ்வதற்கு ஒற்றை வழி இல்லாமலா போகும்? ”
“நம்பிக்கை மட்டும் போதும். பன்னாட்டுச்சமூகத்திற்கு நிகராக எம் இனம் வாழுந்து கொண்டே செல்லும்”
“சொற்களுக்கு வலிக்காமல்இங்கிதமாக அழகாகப் பேசுங்கள்”
“இளமையில் காதலை விட முதுமையில் காதலே உயர்ந்தது”
“தமிழரது சொத்து தமிழ் ஞானம். அதைப் பிள்ளைகளுக்கு கொடுங்கள்!”
“நல்ல இலக்கியங்கள் எமக்குள் இருக்கும் உணர்ச்சிகளை எழுகை கொள்ளசெய்கின்றன. இல்லையேல் அந்தப் புதிய உணர்ச்சிகளை எமக்குள் தோற்றுவிக்கின்றன.”
“சான்றோரும் ஆன்றோரும் போராளிகளும் சீர்திருத்தவாதிகளும் செய்யாததைத் தொழில் நுட்பம் செய்து விட்டது.”
“தொழில் நுட்ப வளர்ச்சியில் இருந்து பெறும் அறிவை வசதிகளை பெற்றுக் கொள்ளுங்கள். ஒழுங்கீனங்களை விட்டுவிடுங்கள்.”

பேசியதில் எனக்குப் பிடிக்காத கருத்து:
“உபநிடதம் கூறுகிறது ‘விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததைவிரும்புங்கள்.’ என்று. நீங்கள் இழந்ததை மறந்து விடுங்கள். கிடைத்தவற்றைஎண்ணி மகிழ்ச்சியாக வாழுங்கள்.நடந்தது காலத்தின் விதி.சமூகத்தின் சதி.மறந்து விடுங்கள்.

பகவக் கீதையில் சொல்லப்பட்டது போல் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது….”

இந்த பகுதியில் சொல்லப்பட்ட கருத்தே எம் விடுதலை வேட்கையை முடக்குவதாய்அமைந்தமையும் இதைசொல்ல அவர் வட மொழி நூல்களை எடுத்தாண்டதும் மனத்திற்கு வேதனை அளித்தது.

நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாகத் தொகுத்து வழங்கியதொகுப்பாளர்   “உங்கள் தமிழில் எங்கள் வலி” மனத்திற்கு மனதுக்கு நிறைவு தந்தது.

ஒரு தமிழ்ப் பேராறு பாயும் எனக் காத்திருந்தோம்.. சிறு நதி மட்டுமே வீழ்ந்தது.இருப்பினும்மகிழ்ந்தோம் அதையும் வீணடிக்காமல்.

இன்னிசை நிகழ்வுகள் யாவும் கவியரசு எழுதிய அதி அற்புதமான தமிழ்ப்பாடல்களாகவே இருந்தன. பாடல் தெரிவுகள் வெகு சிறப்பானவை. பாடிய கலைஞர்களின்திறனும் அதி அற்புதமாக இருந்தன. குறிப்பாக “உயிரும்நீயே..உடலும்நீயே…”, ” கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..”, “விடை கொடு எங்கள் நாடே..” “மழைத்துளி மழைத்துளிமண்ணில் சங்கமம்”அற்புதமாக இருந்தன!!!

அதேபோல் நிவேதா இராமலிங்கம் அவர்களும் அவரது மாணவிகளும் வழங்கிய “அச்சம்அச்சம் இல்லை’’ பாடலுக்கான நடனம் மிக மிக எழுச்சியாக இருந்தது. இதுவும்கவிப்பேரரசு அவர்கள் எழுதிய வரிகளே என்பதில் மனதும் நிறைவு கொண்டது.

விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது; விருந்து வழங்கல் நிகழ்வும்நடைபெற்றது. நீண்டு முழங்கும் உரைகள் இல்லை. கனகச்சிதமாக நேரம் அரங்கம்நிகழ்ச்சிகள் நிருவகிக்கபட்டன.

நிகழ்ச்சியை வெகு சிறப்பாகஒழுங்கமைத்திருந்த சிவா, மோகன் இருவருக்கும் இவர்களுக்குத்துணைநின்ற அனைத்து “தூறல்” ஆதரவாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்.)

மேலும் 308 படங்களுக்குக் காண்க:

http://gallery.seithy.com/THOORAL2014SEITHYGALLERY/index.html