Dec22

Dec22

நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12

  நன்னன் குடி நிகழ்த்திய நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா தி.என்  இராசரத்தினம் கலையரங்கில்  தி.பி. 2046  ஆடித் திங்கள் 14 ஆம் பக்கல் / சூலை 30, 2015 மாலை 6 மணிக்கு முனைவர் தெ. ஞானசுந்தரம் தலைமையில்  நடைபெற்றது.

  புலவர் மா.நன்னன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 36  அகவையில் மரணம் அடைந்த தன் மகன்  மரு. அண்ணலின் அறிவுக்கூர்மை பற்றி எடுத்துக் கூறினார்

‘தமிழைத் தமிழாக்குவோம்’ என்னும் தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகை  ஓரிலக்க உரூபா வழங்கப்பட்டது. மேலும் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்ட  ஆ.தேவி – ஆ.அண்ணாதுரை, சே.செண்பகம் – கு.உத்தண்டி, க.சு.சுபலட்சுமி – கா.கார்த்திகேயன், வித்யாருக்குமணி – புதியவன், க.இரம்யமலர் – டி.புருனோ என்னாரெசு ஆகியஐந்து இணையர்களுக்கும் 10000 உரூபா மேனி மொத்தம் 50000 உரூபா வழங்கப் பட்டது.

பேராசிரியர் மா.நன்னன் எழுதிய தமிழிலக்கணவியல், அருந்தமிழ் விளக்கம், இவர்தாம் பெரியார்(வரலாறு) பெரியாரால் பாராட்டப் பெற்றவர்கள், ஒப்பற்ற சுய சிந்தனையாளர் பெரியார், திராவிட இயக்கம் நூறு ஆகிய 5 நூல்களை வெளியிட்ட  முனைவர் தெ.ஞானசுந்தரம்  தம் தலைமை உரையில் ‘தமிழிலக்கணவியல்’ என்னும் நூல் பற்றிப் பேசும்போது தமிழ் மொழியின் இலக்கணச் சிறப்புகள், நுட்பங்கள் ஆகியன பற்றி விரிவாகப் பேசினார்.

‘அமுத சுரபி’ இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன் ‘அருந்தமிழ் விளக்கம்’ என்னும் நூலைத் திறனாய்ந்தார். தமிழின் ஒலி வடிவம், வரி வடிவம் சிதைக்கப் படுவது குறித்து வருந்திப் பேசினார். தொலைக் காட்சிகளில் தமிழ் மொழி குலைக்கப் படுவதையும்  ஆங்கிலச் சொற்கள்   அளவிறந்து கலந்து பேசப்படுவதையும் சுட்டிக் காட்டினார்.

கண்ணியம் இதழ் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் ‘இவர்தாம்  பெரியார்’ என்னும் நூலையும் இராணி இதழின்
மேனாள் ஆசிரியர் அ. மா. சாமி ‘ஒப்பற்ற சுயச் சிந்தனையாளர் பெரியார்’ என்னும் நூலையும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்  ‘திராவிட இயக்கம் நூறு’ என்னும் நூலையும்   திறனாய்வு செய்து பேசினார்.

தொடக்கத்தில் புலவர் மா.நன்னன் இளைய மகள்  ஔவை அறிமுக உரை ஆற்றினார். விழா முடிவில் வேண்மாள் நன்றி கூறினார்.