தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின்

மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப்

பரிசளிப்பு விழா

     சேத்துப்பட்டு. சன.04. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்வியா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்றது. 

       திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

     இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.

    இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், தண்டராம்பட்டு, போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் நடுவர்களாக விழுப்புரம் மாவட்டச் சிலம்பாட்டக் கழகச் செயலாளர் க.குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் மகேசுவரி ஆகியோர் இருந்தனர்.

    சார் இளையோர் பிரிவில் ஆரணி கோட்டைச் சிலம்பக் குழுவின் செயரேவன், பெரணமல்லூர் புத்தா சிலம்பக் குழுவின் பிரவீன் ஆகியோர் முதலிடத்தையும், இளையோர் பிரிவில் ஆவணியாபுரம் புத்தா சிலம்பக் குழுவின் முரசொலி முதலிடத்தையும், முதுவர் பிரிவில் வந்தவாசி அகிலாண்டேசுவரி கல்லூரி மாணவி விட்ணுப்ரியா, சேத்துப்பட்டு  புத்தா சிலம்பக் குழுவின் இ.காமேசு ஆகியோர் முதலிடத்தையும், மீ முதுவர் பிரிவில் தண்டராம்பட்டு முனியப்பன், சேத்துப்பட்டு பூபாலன் ஆகியோர் முதலிடத்தையும் வென்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்குத்  திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கா.முத்துவேல் பரிசுகளை வழங்கினார்.

    இந்தப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், வரும் சனவரி இறுதி வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க விருக்கிறார்கள்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ந.பார்த்திபன், கவி.விசய், ச.சத்தீசு, இரா.பாலாசி,  ச.சந்தோசு, ஏ.காமேசு, மு.பாலாசி, ச.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.