dinamani-vaithiyanathan-meet

     மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்:

இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு, வள்ளுவரின் திருக்குறளும், ஒளவையாரின் ஆத்திச்சூடி, மூதுரை, கொன்றை வேந்தன் ஆகியவற்றையும் கற்றுக் கொடுங்கள். அவற்றை மனனம் செய்யச் சொல்லுங்கள்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் வேண்டும் என்று பேசுகிறோம். இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போன்றது. வள்ளுவப் பேராசானும், ஒளவைப் பிராட்டியும் கற்றுத் தரப்பட்டுவிட்டால், அந்தக் குழந்தைகளின் ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டுவிடும். அதைவிடுத்து, ‘நர்சரி ரைம்சு’ சொல்லிக் கொடுத்துவிட்டு குழந்தைகள் ஒழுக்கமாக வளரவில்லை என்றால் எப்படி?

மத்தியஅரசின் வாரியப் பள்ளிகளுக்கும் பதின்நிலைப் பள்ளிகளுக்கும் விடுக்கும் வேண்டுகோள். ஆங்கில வழிக் கல்வியுடன் குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுங்கள். தமிழோ, கன்னடமோ, தெலுங்கோ, மலையாளமோ, மராட்டியமோ, வங்காளமோ எந்த மொழியாக இருந்தாலும் குழந்தைகளை அவரவர் தாய்மொழிகளில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர்களாக வளர்த்தெடுங்கள்.

தாய்மொழி தெரியாமல் போய், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தைகளால் இந்தியக் கலை முறைகளையும், பண்பாட்டையும் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தைகள் நமது பண்பாட்டுச் சீலர்களாக வருங்காலத்தில் வருவார்கள் என நினைத்தால் அது வெறும் பகல் கனவாகத்தான் போய்விடும்.

நாம் ஆங்கிலம் படிப்பது அயல்நாடுகளில் வேலை தேடுவதற்காக மட்டுமானதாக இருக்கக்கூடாது. நமது இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் மனித குலம் வாழும் இடமெல்லாம் நிலைநிறுத்துவதற்காக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.

எந்த மாநிலத்தில் இருக்கும் பள்ளியானாலும் சரி, அவர்களின் பயிற்றுமொழி ஆங்கிலமாகவே இருக்கட்டும். ஆனால், குழந்தைகளுக்குத் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்துங்கள் என்றார் அவர்.

எம்.சி.ஆர். சானகி மகளிர் கல்லூரியின் தலைவர் இலதா இராசேந்திரன்: இங்குப் படிக்கும் குழந்தைகள் உயர்ந்த dinamani-vaithiyanathan-meet02பண்புள்ளவர்களாகவும், நாட்டின் மீது மிகுந்த பற்றுள்ளவர்களாகவும் வளர்வார்கள் என்பதில் சிறிதளவிலும் ஐயம் இல்லை. நாளைய சமுதாயம் இன்றைய மாணவர்கள். நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். நம்முடைய இதிகாசங்களில் உள்ள கருத்துகளையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், என்றார் அவர்.

அமிர்தா வித்யாலத்தின் தலைவர் விநயமிர்தா சைதன்யா: குழந்தைகளை ஒழுக்கமுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமிர்தா பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. நமது பண்பாட்டைக் கற்றுத் தருவதோடு, அவர்களின் குண நலன்களை வளர்ப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள்தான் குழந்தைகளின் முதல் குரு. குழந்தைகளிடம் பெற்றோர்கள் நண்பர்கள் போல் பழக வேண்டும். அதேநேரத்தில், தவறு செய்யும்போது கண்டிக்கவும் வேண்டும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளின் நாடகங்கள், நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பள்ளியின் முதல்வர் சீதாலட்சுமி விசுவநாத்து, கல்வி இயக்குநர் எசு.சுந்தரமூர்த்தி, தலைமை ஆசிரியை சுபா சிரீராம் முதலானோர் பங்கேற்றனர்.

 pirar-karuvuulam