பாதிரி ஊரில்
தைத்திருநாள் கலை இலக்கிய விழா

பாதிரி ஊராட்சி மன்றமும் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கமும் இணைந்து தைத்திருநாள் பொங்கல் கலை இலக்கிய விழா வந்தவாசியை அடுத்த பாதிரி ஊரில் உள்ள காந்தித் திடலில் நடைபெற்றது.

இந்த விழாவில் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. இரகமத்துல்லா தலைமை வகித்தார். பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருட்டிணன் வரவேற்றார்.

செல்வி. இரீனாவின் பரத நாட்டியத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தமிழிசைப் பாடல்களை இரா.அருண்குமார், பெ.பார்த்திபன் ஆகியோர் பாடினர். உழவர் திருநாள் சிறப்புக் கவிதைகளைக் கவிஞர்கள் வந்தை குமரன், க.புனிதவதி, ஊடகவியலாளர்
தமிழ் இராசா ஆகியோர் வாசித்தனர்.

மேலும், ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ என்ற தலைப்பில் சீ.கேசவராசுஜ், ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் வி.எல்.இராசன், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் வந்தை பிரேம், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற தலைப்பில் சா.தமீம் ஆகியோர் கருத்துரையாற்றினர். பள்ளி மாணவன் இல. கோபாலகிருட்டிணன் ‘ஓகாசனம்’ செய்து காட்டினார்.

பின்னர், குறும்பாக் கவிஞரும், தமிழ்ச் சங்க அறிவுரைஞருமான மு.முருகேசு நடுவராகப் பங்கேற்ற ‘இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களின் பயணம் – சிகரத்தை நோக்கியே!,
சிரமத்தை நோக்கியே!’ எனும் தலைப்பிலான சிந்தனைச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
‘சிகரத்தை நோக்கியே’ என்ற அணியில் செயலாளர் பா.சீனிவாசன், இரா.பாசுகரன், ஆசிரியை எசு.இரசீனா ஆகியோரும், ‘சிரமத்தை நோக்கியே’ என்ற அணியில் துணைத் தலைவர் ம.சுரேசு பாபு, பேராசிரியர் க.பூபாலன், இரா.நளினி ஆகியோரும் பங்கேற்றனர். இறுதியில், ‘இன்றைய இளைஞர்களின் பயணம் சிகரத்தை நோக்கியே’ என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார்.

‘நாமும் தமிழும்’ என்ற தலைப்பில் மனோசு குழுவினரின் குறுநாடகம் நடைபெற்றது. மேலும், கலைநிகழ்ச்சிகளிலும் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைத் துணைச் செயலாளர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, இளைஞர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ம.பாபு நன்றி கூறினார்.