பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.”

arputham perarivalan01

 “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.  வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை செய்யப்படுவான் என எதிர்பார்த்தேன். ஆனால், மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை. மக்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையாகக் குரல் கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவான். மக்களின் குரல் தான் அரசின் செவிக்கு எட்டும். அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். வழக்கு அதிகாரி தியாகராசன் இத்தனைக் காலம் கழித்து உண்மையைக் கூறியிருக்கிறாரே என்ற வருத்தம் கிடையாது. இப்போதாவது உண்மையை வெளியிட்டாரே என்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இராசீவு கொலை வழக்கில் தண்டனை பெற்ற மற்றவர்களின் குடும்பத்தினரும் எங்களுடன் இணைந்திருந்தால் எப்போதோ விடுதலை கிடைத்திருக்கும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஆனால் அவர்கள் ஏன் போராட முன்வரவில்லை என என்னால் கூற முடியாது. வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்டதும் தமிழக முதல்வரைச் சந்திக்க விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. தமிழக அரசு எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளது. உலகில் எங்கேயும் இல்லாத வகையில் மரணத் தண்டனையை  நீக்கக் கோரி தமிழகச் சட்டப்பேரவையில் 2011 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நாங்கள் நன்றியோடு பார்க்கிறோம்” என்றார்.

 தொடர்ந்து ‘உயிர் வலி’ என்ற தலைப்பில் மரணத் தண்டனைக்கு எதிரான இயக்கம் உருவாக்கியுள்ள குறும்படத்தை அவர் வெளியிட்டார். இந்தியப் பொதுவுடைமைக்கட்சி  மாவட்டச் செயலாளர் அ.மோகன்ராசு, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரபு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் மாரிச்செல்வம், அருள்தந்தை சுந்தரி மைந்தன், பேராசிரியை பாத்திமா பாபு, அமைப்பு சாராத் தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருட்டிணமூர்த்தி  முதலானோர் கலந்து கொண்டனர்.

death-3thookku-santham