siva_ayyathurai svasamaward2015

  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில்’சுவாசம் சாப்ட்’ விருதுகள் தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள் 75 பேர்களுக்கு   வழங்கப்பட்டன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ‘சுவாசம் சாப்ட்டு’ தலைவர் கிருட்டிணன், செயல் அதிகாரி கார்த்திகேயன், நிதி அதிகாரி கணேசு, கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, மரு. சுரேந்திரன், வித்யாகிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.

   இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்ற மின்னஞ்சலை(‘இ மெயிலை’)க் கண்டுபித்த சிவா ஐயாத்துரை, “வெளிநாட்டவரால் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம்” என்றார்.

அவர் உரை வருமாறு:-

  எனது சொந்த ஊர் இராசபாளையம். நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக என் குடும்பம் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தது. கடந்த 1978 இல் எனது 14 அகவையில் புதுயார்க்கு பல்கலைக்கழகம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 40 மாணவர்களைத் தேர்வு செய்து, கணிணிநிரல் மொழிகளைக் கற்றுக் கொடுத்தது. அப்பயிற்சியில் பங்கெடுத்த ஒரே இந்திய மாணவன் நான். அதில் ‘போர்ட்ரான் 4’ என்ற நிரல் மொழியைக் கற்றுக் கொண்டேன்.

UMDNJ

  அப்போது என் தாயார் புது செர்சி மருந்தியல்-பல்மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் (‘University of Medicine and Dentistry of New Jersey’) பணிபுரிந்தார். அங்கு பேராசிரியர் லெசு மைக்கேல்சனிடம் என்னை அழைத்து சென்றார். அவர் அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணிணியில் ஒருங்கிணைக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். என்னை உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

  அந்த மருத்துவமனையில் நோயாளிக்குத் தனித்தனியாகக் குறிப்பு எழுதுவர். எழுதப்பட்டதை அங்கிருக்கும் அஞ்சல் பெட்டி மூலம் பரிமாறிக் கொள்வர். இந்தப் பரிமாற்றத்தை ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு மின்னணு வடிவத்தில் அனுப்ப வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் மின்னஞ்சல் முறை. ‘போர்ட்ரான்’ மொழியில் 50 ஆயிரம் வரிகள் கொண்ட அந்த நிரலை நான் எழுதியபோது, எனக்கு அகவை 14. அதற்கு மின்னஞ்சல்( ‘இ மெயில்’) எனப் பெயரிட்டேன். 1982 இல் காப்புரிமையைப் பெற்றேன். அப்போது இணையம் வரவில்லை. கடந்த 1989 இல்தான்   இணையவழி மின்னஞ்சல் அனுப்பும் ஆய்வு முயற்சி தொடங்கியது.

 கடந்த 1996 இல் ஃகாட்டு மெயில்’ / Hotmail பரவியது; 1997 இல் ‘யாஃகூ’, 2007 இல் கூகுள் (G-mail)’ வந்தன. இன்று நாம் பயன்படுத்தும் அகப்பேழை(in-box), புறப்பேழை(out-box) முதலான 86 வகையான மி-அஞ்சல் வசதிகளை எழுதி வடிவமைத்தது நான் தான்.

  கடந்த 1993இல் அமெரிக்கத் தலைவராகக் கிளின்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகையில் 5,௦௦௦க்கும் மேற்பட்ட   அஞ்சல்கள் வந்தன. அந்த அஞ்சல்களை வகை வாரியாகப் பிரித்துப் பார்க்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் போட்டி நடந்தது.

அதில் நான் கண்டறிந்த ‘பின்தொடுப்பஞ்சல்/எக்கோ மெயில்’ வெற்றி பெற்றது. தற்போதும் வெள்ளை மாளிகையில் இந்தத் தொழில்நுட்பம்தான் உள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்தியர்களையும், தமிழர்களையும் எல்லா பொறுப்பிலும் வைத்து அழகு பார்ப்பர். ஆனால், நாம் கண்டுபிடிப்பாளராக மாறினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

  ‘அனைத்தையும் அவர்கள்தான் கண்டுபிடித்தனர்’ என நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம். நம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலாளர்கள் நம் நாட்டில் இருந்து உள்ளனர். நம்மாலும் கண்டுபிடிக்க முடியும். அறிவு என்பது மரபணு, சமூக ரீதியாக வருவதில்லை. நம்முடைய சூழ்நிலையைப் பொறுத்து தான் அறிவு வளர்கிறது. நம்முடைய கண்டுபிடிப்புக்கு வெளிநாட்டவர் கதைநாயகனாக உள்ளனர் என்றார்.