வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா

        வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.

        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.

நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

        தமிழக அரசின் பொது நூலகத்துறை  வழங்கிய ‘நூலக ஆர்வலர் விருது-2018’ பெற்ற வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் முருகேசுக்கும் ‘நல்நூல்கர் விருது-2018’ பெற்ற வந்தவாசி கிளை நூலகர் பூ.சண்முகத்திற்கும் பாராட்டு வழங்கினர்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பரிசளித்துத், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி பேசினார். அவர்,  “தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் நூலகச் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நூலகச் செயல்பாடுகளை நடத்திவரும் நூலகருக்கும் நூலக வாசக வட்டத்திற்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

         2018-ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளுக்காகத் திருவண்ணாமலை மாவட்டம் 7 விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. அதிலும் வந்தவாசி அரசுக்கிளை நூலகம் சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருதினையும் நல்நூலகருக்கான விருதினையும் பெற்றுள்ளது. மாநில அளவில் ஒரே நூலகத்திற்கு இரு விருதுகளும் கிடைத்திருப்பது வந்தவாசிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.

         வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் வந்தவாசி கிளை நூலகம், சொந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான திட்டமிடல்களைச் செய்து வருகின்றோம். நூலகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. நூலகத்திலுள்ள நூல்களைப் பொதுமக்களும் மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

          விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மைய முதல்வர் எ.தேவா, இந்தியன் தொலைக்காட்சி இயக்குநர் முனைவர் வந்தை பிரேம், பீ.இரகுமத்துல்லா, அரிமா இரா.சரவணன், கவிஞர் முகம்மது அப்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

          வெண்குன்றம் உலக விழா(jubilee global) பள்ளித் தாளாளர் சான் சேவியர் தங்கராசு உரூ.1000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தமைக்குப் பாராட்டினர்.

 விழாவில், வந்தாசி வட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகர்கள் கலந்துகொண்டனர்.

          நிறைவாக, நூலகர் சா.தமீம் நன்றி கூறினார்.

 

வந்தையன்பன்